மகடான்: டெல்லியிருந்து அமெரிக்கா சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் 36 மணி நேரத்திற்குப் பின்னர் மாற்று விமானம் மூலம் பயணிகள் அமெரிக்கா புறப்பட்டனர்.
டெல்லியிலிருந்து, அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு ஏர் இந்தியாவின் போயிங் 777 ரகவிமானம் 216 பயணிகள் மற்றும்16 ஊழியர்களுடன் கடந்த செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றது. ரஷ்ய வான்பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, அதன் ஒரு இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, ரஷ்யாவின் மகடான் நகரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில் பயணம் செய்த பயணிகள் அருகில் உள்ள ஓட்டல்கள், பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கவைக்கப்பட்டனர். இவர்களை அமெரிக்கா கொண்டு செல்ல, மாற்று விமானத்தை ஏர் இந்தியா அனுப்பியது.
36 மணி நேர காத்திருப்புக்குப் பின்னர் பயணிகள் ஏர் இந்தியாவின் மாற்று விமானம் மூலம் சான் பிரான்சிஸ்கோ புறப்பட்டனர். மாற்று விமானம் அனுப்பப்பட்டதை ஏர் இந்தியா நிறுவனம் ட்வீட் மூலம் உறுதி செய்தது. 216 பயணிகள் 16 விமான சிப்பந்திகளுடன் மாற்று விமானம் புறப்பட்டுச் சென்றது.
முன்னதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் கூறுகையில், “அந்த விமானத்தில் 50க்கும் குறைவான அமெரிக்கர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் யாரும் ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தையோ தூதரக அதிகாரிகளையோ தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை” என்று கூறியிருந்தார்.