ராகுல் காந்தி அவதூறு வழக்கில் கிடைத்த தீர்ப்பின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவரது மக்களவை தொகுதி எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாடிய ராகுல் காந்திக்கு எந்தவித இடைக்கால நிவாரணமும் கிடைக்கவில்லை. கடைசியாக சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜூனில் இறுதித் தீர்ப்பு
அடுத்தகட்டமாக குஜராத் உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டிலும் பயனில்லை. அதேசமயம் இந்த வழக்கில் ஜூன் மாதம் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது. தற்போதைக்கு குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இதற்கிடையில் வயநாடு மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இங்கு அடுத்த 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தேர்தல் ஆணையம் முடிவு
ஒருவேளை அடுத்த பொதுத்தேர்தல் வருவதற்கு ஓராண்டிற்கும் குறைவான நாட்களே இருந்தே தேர்தல் ஆணையம் எப்படி வேண்டுமானாலும் முடிவு எடுக்கலாம். தற்போதைய சூழலில் இடைத்தேர்தலுக்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை எனக் கூறப்பட்டது. இந்நிலையில் எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாத சூழலில், வயநாடு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.
கோழிக்கோடு ஆட்சியர் நடவடிக்கை
இன்றைய தினம் இதற்கான ஏற்பாடுகளை கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் முடுக்கி விட்டார். இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கினை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரங்கள் முதல்கட்ட சோதனைக்கு உட்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் எப்போது?
இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் வயநாடு தொகுதி மக்கள் மத்தியில் ஒருவித பரபரப்பு தொற்றிக் கொண்டது. விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பிற்கு ஆளாகியுள்ளனர். இதுபற்றி அதிகாரிகள் தரப்பில் விசாரிக்கையில் இடைத்தேர்தல் விரைவில் வருமா? இல்லை தள்ளிப் போகுமா? என்பது பற்றி எந்தவித தகவலும் வரவில்லை.
ஏற்பாடுகள் தீவிரம்
முதல்கட்ட ஏற்பாடுகளை செய்யுமாறு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்பேரில் தான் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டனர். எப்படியும் நீதிமன்ற விவகாரத்தில் இறுதித் தீர்ப்பு கிடைக்கும் வரை இந்திய தேர்தல் ஆணையம் காத்திருக்கும். அதன்பிறகே இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட வாய்ப்பிருக்கிறது.
பிரியங்கா காந்தி போட்டியிடுவாரா?
ஒருவேளை நீதிமன்ற கதவுகள் ராகுல் காந்திக்கு அடைபட்டு விட்டால் வரக் கூடிய இடைத்தேர்தல் மற்றும் அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட முடியாது. இத்தகைய சூழலில் வயநாடு தொகுதியில்
காங்கிரஸ்
கட்சி சார்பில் ராகுலின் தங்கை பிரியங்கா காந்தி போட்டியிடக் கூடும் என்ற பேச்சு அடிபடுகிறது.