தமிழகத்தில் கத்திரி வெயில் முடிந்த நிலையில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்பொழுது 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வெப்பம் வருகிறது. மேலும் வெயிலின் தாக்கத்தால் பகல் நேரங்களில் கடுமையான அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 107 பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. மேலும், திருவள்ளூரில் 106 பாரான்ஹீட்டும், சென்னையில் 105 பாரான்ஹீட்டும், மதுரை, கரூர், தூத்துக்குடி மற்றும் ஈரோடு 103 பாரன்ஹீட்டும், திருச்சி 102 பாரன்ஹீட்டும், திருப்பத்தூர், நாமக்கல், திருநெல்வேலியில் 101 பாரன்ஹீட்டும் தஞ்சாவூரில் 100 டிகிரி பாரன்ஹீட்டும் வெயில் பதிவாகியுள்ளது.