சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், சென்னை புளியந்தோப்பில் நேற்று (ஜூன் 7) நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான பி.கே.சேகர் பாபு இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். அரண்மனை தோற்றத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த விழா மேடையின் இருபுறமும் டிஜிட்டலில், கருணாநிதி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது. உச்சியில் தி.மு.க-வின் கொடி பறக்க, அதற்குக் கீழே ‘கலைஞர் 100’ என பிரமாண்ட விளக்குகளால் எழுதப்பட்டிருந்தது. கருணாநிதியுடன் அவருடைய மனைவி தயாளு அம்மாள், முதல்வர் ஸ்டாலின், நடிகர்கள் விஜயகாந்த், ரஜினிகாந்த் ஆகியோர் இருக்கும் படங்கள் பெரிய டிஜிட்டல் திரையில் மேடையின் பக்கவாட்டில் இடம்பெற்றிருந்தன.
நிகழ்வில், தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் ப.செல்வராஜ், அமைச்சர் உதயநிதி உட்பட பல அமைச்சர்கள் பங்கெடுத்தனர். கூட்டணிக் கட்சியினர்களான ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சமகால அரசியலோடு பொருத்தி கருணாநிதி குறித்துப் பேசினர்.
இந்த நிகழ்வுக்காக வந்தவர்களை வரவேற்றதோடு, வரவேற்புரையாற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்தார் சேகர் பாபு. முதல் நிகழ்வாக, முதல்வரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதிய ‘அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே’ புத்தகத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட, தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து முதல் நபராகப் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், கருணாநிதியின் நூறு சாதனைகளை மூச்சுவிடாமல் பேசி பட்டியலிட்டார்.
அவரைத் தொடர்ந்து பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், “தி.மு.க ஆன்மிகத்துக்கு எதிரான கட்சி என்று பல ஆண்டுகளாக உருவகப்படுத்தப்பட்டு வருகிறது.
அதை உடைத்திருப்பவர் சேகர் பாபு. உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியேற்க 2 நாள்கள் பொறுத்திருக்க முடியாதா… முதலமைச்சர் வெளிநாட்டிலிருந்து வருவதற்குள் என்ன அவசரம்… தொழில் முதலீடுகளை ஈர்ப்பது குறித்து விமர்சிப்பவருக்கு அதுசார்ந்து என்ன அனுபவம் இருக்கிறது? தொழில்துறை அமைச்சராக இருந்திருக்கிறாரா…
வேண்டுமென்றே அரசியல் செய்ய எதையாவது பேசுகிறார் ஆளுநர். முதலமைச்சரைச் சீண்டிப் பார்க்கக் கூடாது. எதிர்வினையாற்றாமல் பொறுமை காத்துக்கொண்டிருக்கிறார் முதல்வர்” என்று ஆளுநரை எச்சரிக்கும் தொனியில் பேசி அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பேசினார்.
ஜவாஹிருல்லா பேச வந்ததுமே பள்ளிவாசலில் தொழுகை பாடல் ஒலித்தது. தொழுகை முடியும் வரை ஜவாஹிருல்லாவும் பேசாமல் தொழுகையில் பங்கெடுக்கும் வகையில் அமைதியாக நின்றார். பின்னர் பேசிய அவர், “இதை coincident என்று நினைக்கவில்லை. சிறுபான்மை சமூகத்துக்கும் கலைஞருக்கும் அவ்வளவு நெருக்கமான பந்தம் இருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது” என நெகிழ்ச்சியோடு கூறினார். அடுத்து, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், “காயிதே மில்லத் கலைஞரின் கரங்களைப் பற்றிச்சொன்னார். `முஸ்லிம் சமூகத்துக்கு நீங்கள் செய்த நன்மைகளுக்காக நாங்கள் என்றும் கடமைப்பட்டிருக்கிறோம். நன்றியுள்ளவர்களாக இருப்போம்’ என்று. அதைத்தான் இன்றைக்கு நாங்களும் சொல்கிறோம். சென்னை பல்கலைக்கழகத்துக்கு மட்டும்தான் தமிழ்நாட்டில் பெயர் இல்லாமல் இருக்கிறது. அதற்கு கலைஞர் பெயரை வைக்க வேண்டும்” என்கிற கோரிக்கையை முன்வைத்தார்.
“சமத்துவபுரமும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டமும்தான் கலைஞரின் மாபெரும் சாதனைகள்” என்று கருணாநிதியின் பெருமைகளைப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “பெரியார் நினைவு சமத்துவபுரம் வேறெந்த மாநிலத் தலைவர்களும் நினைத்துக்கூட பார்க்காத சாதனை. சாதியற்ற சமூகம் அமைய வேண்டும், அனைத்து சமூகங்களும் ஒன்றாக வேண்டுமென்று கவலைப்பட்ட ஒரே தலைவர் கலைஞர். எல்லோரையும் ஒன்றாக வாழ வைக்க வேண்டுமென்ற சிந்தனை பெரியாருடையது, அண்ணாவுடையது. இமயம் வரை ஏறிட முடியும், கண்டம்விட்டு கண்டம்கூட தாண்டிவிடலாம். மகாராணியாக இருந்தாலும் கருவறைக்குள் நுழைய முடியாது. அதை சட்டமியற்றி தகர்த்தவர் கலைஞர்.
மாநில உரிமை பறிபோவதைப்பற்றி இப்போதுதான் எல்லா மாநிலங்களும் கவலைப்படுகின்றன. ஆனால் 1969-ல் கலைஞர் முதல்வரான பின்னர், ராஜமன்னார் குழுவை அமைத்தார். மாநில உரிமை கேட்டு முழங்கினார். அப்போதே சொல்லிவிட்டார் `மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்று. கலைஞரின் பிறந்தநாளை மாநில சுயாட்சி நாளாக அறிவிக்க வேண்டும். ஒடிசா விபத்தால் கலைஞர் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை ரத்துசெய்தது கலைஞரின் பண்பு. சனாதன சக்திகளை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றிடும் சக்தி முதல்வர் ஸ்டாலினிடம் இருக்கிறது. உங்களைப்போல எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான மறுவரையில் நம்முடைய தலையீடு முக்கியமானதாக இருக்க வேண்டும். தொகுதிகள் எண்ணிக்கையை அதிகரித்தால் மிக எளிதாக இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கான எண்ணிக்கையைப் பெற்று விடுவார்கள்” என்று சமகால அரசியலைத் தொட்டுப் பேசினார்.
அடுத்ததாகப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “அரசாங்க மாளிகையில் இருந்துகொண்டு எதை வேண்டுமானாலும் பேசுவாரா… திராவிடத்தைப் பற்றி, தமிழ்நாட்டைப் பற்றி, தமிழ்நாட்டின் தொழில் வளத்தைப் பற்றி ஆளுநர் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆளுநர் அரைவேக்காடாக இருக்கிறார். மாநில சுயாட்சி கொள்கையை இந்தியா முழுக்க கொண்டு சென்றதில் கலைஞர் முக்கியமானவர். கலைஞர் நூற்றாண்டு விழா என்பது சனாதன சக்திகளுக்கு சாவுமணி அடிக்கும் விழா. நேற்று தேசம் கலைஞரை எதிர்பார்த்ததைப்போல, இன்றைக்கு ஸ்டாலினை எதிர்பார்க்கிறது. சோசலிச தத்துவத்தை உலகத்துக்கு தந்த மாமேதை காரல் மார்க்ஸுக்கு சென்னையில் சிலை வைத்து இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்ய வேண்டும்” என்றார்.
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், “14 வயது முதல் இறுதி மூச்சுவரை எண்ணற்ற போர்க்களங்களைச் சந்தித்தவர் கலைஞர். உலகம் உள்ள வரை தமிழ் இருக்கும். தமிழ் இருக்கும் வரை திருக்குறள் இருக்கும். அதுவரை கலைஞரும் இருப்பார்” என்று திருக்குறளுக்கும் கலைஞருக்கும் உள்ள நெருக்கத்தை சொல்லிச் சென்றார்.
அவரைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சியில் இறுதியாகப் பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, “முன்னாள் முதல்வர் கலைஞருக்கு இருந்த பேராண்மை இன்றைய முதல்வருக்கும் இருக்கிறது.
மக்களாட்சியின் மூலம் யாரையெல்லாம் கூட்டிப் பெருக்கி குப்பைத் தொட்டியில் தள்ளினோமோ… அவர்களை அழைத்து நாடாளுமன்றத் திறப்பில் பங்கெடுக்கச் செய்தார்கள். முற்போக்காளர்கள் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? தொழில் முதலீட்டு நிறுவனங்கள் இங்கே எப்படி வரும் என்று ஆளுநர் கேட்கிறார். 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு எதாவது ஸ்பெஷல் பேக்கேஜ் கொடுத்திருக்கிறதா மோடி அரசு… நீங்கள் எதையும் கொடுக்காமலேயே தமிழ்நாடு இயங்குகிறது. காதர் மொய்தீன் கேட்டதுபோல சென்னை பல்கலைக்கழகத்துக்கு கலைஞர் பெயரையும் சேர்த்து வைக்க வேண்டும். சென்னையை மட்டுமே மையமாக வைத்து சென்னை பல்கலைக்கழகம் செயல்படுகிறது. சென்னையுடன் கருணாநிதி பெயரையும் சேர்த்து அந்தப் பல்கலைக்கழகத்துக்குப் பெயரிடுவது என்பது அவரது நூற்றாண்டு விழாவுக்கு பொருத்தமாக இருக்கும்” என்றார்.
தலைமை உரையாற்றிய துரைமுருகன், “கூட்டம் நடத்துவதற்கு என்றே பிறந்தவர் சேகர் பாபு. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்ததற்குக் காரணமானவர் கலைஞர். சுதந்திர தினத்தில் மாநில முதல்வர்கள் தேசியக்கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுக் கொடுத்தவர் கலைஞர். வாஜ்பாய், வி.பி.சிங் என பல பிரதமர்களை உருவாக்கியர். உலக வரலாற்றில் 50 ஆண்டுக்காலம் ஒரு கட்சிக்கு தலைவராக இருந்த ஒரே மனிதர் கலைஞர் மட்டும்தான்” என்றார்.
அதைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் பி.கே.சேகர் பாபு வெள்ளி செங்கோல் வழங்கினார். சென்னை மேயர் ஆர்.பிரியா, தாயகம் கவி எம்.எல்.ஏ ஆகியோர் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
இதனையடுத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “கடந்த 1949 செப்டம்பர் 17-ம் நாள் கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் தி.மு.க தொடங்கப்பட்டது. அதே வடசென்னையில் கருணாநிதி நூற்றாண்டு விழா தொடங்குகிறது. கட்சி தோன்றிய வடசென்னையில் நூற்றாண்டு விழா தொடங்குவது சிறப்பானது. இந்த மேடையில் இருக்கும் தோழமைக் கட்சிகளுக்கு வழிகாட்டியாக இருந்தவர் கருணாநிதி. அரசியல் கட்சித் தலைவர், மாநிலத்தின் தலைவர் மட்டுமல்லாமல் உலகத் தலைவராகச் செயல்பட்டவர் கருணாநிதி. திராவிட மாடல் ஆட்சிக்கு அடித்தளமிட்டவர் கருணாநிதி. திராவிடம் என்ற சொல்லைப் பார்த்து சிலர் பயப்படுகிறார்கள். கண்ணை மூடி கொண்டு விதண்டாவாதம் செய்கிறார்கள். எல்லோருக்கும் எல்லாம் உண்டு என்கிறது திராவிட இயக்கம்.
திராவிட மாடலின் வளர்ச்சிதான், இந்தியாவில் தமிழகத்தை வளரச்செய்யும். இந்த தன்னம்பிக்கையை என்னுள் வளர்த்தவர் கருணாநிதி. நான் அவரின் கொள்கை வாரிசு. கடந்த 50 ஆண்டுகளில் தமிழகம் அடைந்த நன்மையைச் சொல்லத்தான் இந்த நூற்றாண்டு விழா. ஆகஸ்ட் 7-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவகம் திறக்கப்படவிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் களம் நமக்காகக் காத்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில், யார் ஆட்சி அமைந்து விடக்கூடாது என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாக இது அமைய வேண்டும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வேறுபாடு மறந்து இந்தியாவை காப்பாற்ற ஒன்று சேர்ந்தாக வேண்டும்.
தமிழகத்தில் ஜனநாயக ஆட்சி அமைய கூட்டணி அமைத்ததுபோல், தேசிய அளவில் அமைய வேண்டும் என நான் அகில இந்திய தலைவர்களிடம் தொடர்ந்து சொல்லி வருகிறேன். மதவாத பா.ஜ.க சக்தியை வீழ்த்த தேசிய அளவில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். தேவையற்ற முரண்களுக்கு இடம் தரக்கூடாது.
அவதூறுகளைப் பரப்ப பா.ஜ.க-விடம் ஒரு கூட்டம் இருக்கிறது. தமிழகத்தில் ஆளுநராக இருப்பவர் செய்யும் சித்து விளையாட்டுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பொறுத்தது போதும் பொங்கி எழுவோம் என்ற உணர்ச்சியுடன் புறப்பட்டிருக்கிறோம். ஆளுநர் எதை வேண்டுமானாலும் பேசட்டும். மக்கள் நம்முடன் இருக்கின்றனர். நம்மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர். நம் உள்ளத்தை ஒற்றுமையால் கட்டமைப்போம். நாடாளுமன்றத் தேர்தல் நமக்காக அல்ல; நாட்டுக்காக; ஜனநாயகத்தைக் காப்பாற்ற நடக்கும் தேர்தல். இதில் மகத்தான வெற்றி பெற சபதமேற்போம், உறுதியேற்போம்” என்று சூளுரைத்து விழாவை நிறைவு செய்தார்.