வைரமுத்து தெருவுலயா இருக்காரு.. அவருக்கு 'கனவு இல்லம்' அவசியமா? விளாசிய சவுக்கு சங்கர்

சென்னை:
பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் விரும்பிய இடத்தில் வீடு வழங்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அண்மையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், “தமிழ் மொழி வளர்ச்சி, இலக்கிய பங்களிப்புக்காக சர்வதேச அங்கீகாரம் பெற்ற விருதுகள், சாகித்ய அகாடமி விருது, கலைஞர் செம்மொழி விருது ஆகியவற்றில் ஏதேனும் ஒரு விருதை பெற்றவர்களுக்கு ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் அவர்கள் விரும்பிய இடத்தில் வீடு வழங்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு எழுத்தாளர்கள் ஈரோடு தமிழன்பன், புவியரசு, சுந்தரமூர்த்தி, பூமணி, மோகராசு, இமயம் ஆகிய 6 பேருக்கு அவர்கள் விருப்பத்துக்கேற்ப சென்னை, கோவையில் வீடுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துக்கு ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “வைரமுத்து வீடு இல்லாம தெருவுலயா இருக்காரு? இவருக்கு எதுக்கு கனவு இல்லம் வீடு? 2006ல சம்பாரிச்சது கொஞ்ச நஞ்சம் அல்ல. பெரியார் படத்துல ஒரு பாட்டுக்கு 5 லட்சம் வாங்குன பெரிய மனுசன். அந்த படமே அரசு மானியதுத்துல எடுத்ததுதான். இந்த அரசாங்கத்துக்கு துளி கூட சூடு, சொரணை கிடையாதா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவரது மற்றொரு பதிவில் வைரமுத்துக்கு சொந்தமாக சென்னை பெசன்ட் நகர், திருவான்மியூரில் உள்ள 3 வீடுகளின் முகவரி உள்ளிட்ட விவரங்களை சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார். அதற்கு கீழே, “கவிஞருக்கு இந்த மூணு வீடு போதாதா? கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா உங்களுக்கு? யார் அப்பா வீட்டு பணம்? ” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.