சென்னை: மருத்துவ இடங்களுக்கு மாநில அரசுகளே கலந்தாய்வை நடத்தலாம் என மத்திய அரசு பதில் அனுப்பியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கூறியதாவது: மருத்துவ இடங்களுக்கு மத்திய அரசால் பொது கலந்தாய்வு நடத்தப்படும் என சுற்றறிக்கை பெறப்பட்டது. இது தொடர்பாக முதல்வரின் ஆலோசனை பெற்று, சுகாதாரத்துறைச் செயலர் மூலம் மத்திய அரசுக்கு ஆட்சேபணை கடிதம் அனுப்பப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பொது கலந்தாய்வு இல்லை எனவும், மாநில அரசுகளே கலந்தாய்வை நடத்திக் கொள்ளலாம் எனவும் மத்திய அரசு பதில் அனுப்பியுள்ளது. முதல்வரின் தீர்க்கமான வழிகாட்டுதலின்படி, மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் மாநில உரிமைகள் மீதான பாதிப்பில் இருந்து மருத்துவத்துறைக்கு விடிவு கிடைத்திருக்கிறது.
மருத்துவக் கல்லூரிகளையெல்லாம் மூடி விட்டதை போன்ற பிரம்மாண்ட மாயத் தோற்றத்தை சில அரசியல் கட்சித் தலைவர்கள் உருவாக்கி வந்தனர். நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தேசிய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்தது. அப்போது சிசிடிவி, பயோ மெட்ரிக் போன்றகுறைபாடுகளைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட 3 மருத்துவமனைகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் மருத்துவக் கல்வி இயக்குநர் தலைமையிலான குழுவை டெல்லிக்கு அனுப்பினோம். மேலும், குறைகளும் சரி செய்யப்பட்டு தேசிய மருத்துவக் கவுன்சிலுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் ஆய்வு செய்து நோட்டீஸை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
அதன்படி, சென்னை ஸ்டான்லி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியன 5 ஆண்டுகள் இயங்க தடையில்லை எனவும் அறிவித்துள்ளனர். அதற்கான எழுத்துப்பூர்வமான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும். திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டும் இன்று ஆய்வு நடைபெறுகிறது. இதற்கும் தீர்வு கிடைக்கும்.
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை நல மருத்துவமனைகளில் (ஆர்சிஎச்) தூய்மைப் பணியாளர்கள் தற்காலிகமாக பணியாற்றி வந்தனர். அவர்களுக்கு ரூ.1500 ஊதியம் போதுமானதல்ல. தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எனவே, அவர்களை பன்னோக்கு மருத்துவமனைகளில் உள்ள 878 காலிப்பணியிடங்களில் நியமிப்பது தொடர்பான அரசாணையும் வெளி யிடப்பட்டுள்ளது.
இவ்வாறு நியமிக்கப்படுவோருக்கு ரூ.15 ஆயிரம் ஊதியம் கிடைக்கும். 2 ஆயிரம் பேரில் 878 பேருக்கு மட்டும் அந்தந்த மாவட்ட சுகாதார சொசைட்டி மூலம் நியமனம் வழங்கப்படும். அடுத்தடுத்த காலிப்பணியிடங்கள் உருவாகும்போது மீதமுள்ள பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றுவோர் செவிலியர் குடியிருப்புகளிலும், துணை சுகாதார நிலையங்களிலும் தங்கிக் கொள்ளலாம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.