சென்னை: பிரபாஸின் ஆதிபுருஷ் படம் அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட டிரெய்லர் வெளியீட்டு விழாவும் அதில் வெளியிடப்பட்ட டிரெய்லர் பற்றித் தான் ஒரே பேச்சாக அடிபட்டு வருகிறது.
திருப்பதிக்கு சென்று பெருமாள் ஆசியை வாங்கிக் கொண்டு படத்தை வெளியிட நினைத்த படக்குழுவுக்கு இயக்குநர் ஓம் ராவத் ஹீரோயின் க்ருத்தி சனோனுக்கு திருப்பதியிலேயே கொடுத்த முத்த வீடியோ வெளியாகி தலைவலியை உண்டாக்கி உள்ளது.
மேலும், ஆதிபுருஷ் டிரெய்லர் வெளியான நிலையில், ஏகப்பட்ட ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.
பயங்கர ப்ரமோஷன்: பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் அனிமேஷன் போன்ற லைவ் ஆக்ஷன் படத்துக்கு இப்படியொரு ப்ரமோஷனா? என ஒட்டுமொத்த சினிமா உலகமும் வாயடைத்துப் பார்க்கும் அளவுக்கு பயங்கர ப்ரமோஷன் நடைபெற்று வருகிறது.
டீசரை விட டிரெய்லரில் சிஜி காட்சிகள் சிறப்பாக மெருகூட்டப்பட்டிருந்தாலும், படமாகவும் பிரபாஸ் ராமராக பேசும் வசனங்களிலும் எந்தவொரு ஈர்ப்பும் இல்லை என்றே ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
முத்த சர்ச்சை: பிரபாஸின் ஆதிபுருஷ் படத்துக்கு மிகப்பெரிய எதிரியாக திருப்பதியில் படத்தின் இயக்குநர் ஓம் ராவத் சீதையாக படத்தில் நடித்துள்ள ஹீரோயின் க்ருத்தி சனோனுக்கு முத்தம் கொடுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சீதையாக நடிக்க விரதம் எல்லாம் இருந்தார் என க்ருத்தி சனோன் சொன்னதெல்லாம் சுத்தப் பொய் என்றும் திருப்பதி கோயிலில் கூட எப்படி கண்ணியம் காக்க வேண்டும் என்பது அவருக்கும் ஆதிபுருஷ் படத்தை எடுத்த இயக்குநருக்கும் தெரியவில்லை என பக்தர்கள் விளாசி வருகின்றனர்.
சந்திரமுகி சாமியார்: மேலும், ஆதிபுருஷ் படத்தின் டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் பிரபாஸின் லுக் அப்படியே சந்திரமுகி, ஆப்தமித்ரா உள்ளிட்ட படங்களில் சாமியாராக நடித்த நடிகர் அவினாஷ் மாதிரியே இருக்கு என்றும் ராமர் ஃபீலிங்கே வரவில்லை என்றும் கலாய்த்து வருகின்றனர்.
அனுமனுக்கு ஒரு தனி சீட் என படக்குழு சொன்னதில் இருந்து அது தொடர்பான ஏகப்பட்ட ட்ரோல் மீம்களும் குவிந்து வருகின்றன.
ராவணனை சரியா காட்டல: சாமியார் வேடம் அணிந்து கொண்டு சீதையை கடத்தும் அந்த ஒரு காட்சியில் மட்டுமே சைஃப் அலி கானை காட்டி டிரெய்லரை ஓட்டி உள்ளனர் என்றும் ராவணனாக சைஃப் அலி கான் டீசரில் எப்படி இருந்தாரோ அதே போலத்தான் படத்திலும் இருக்கப் போகிறார்.
அதை மாற்றாமல் மறைத்தே படத்தை ப்ரமோட் செய்து ஓட்ட படக்குழு திட்டமிட்டுள்ளனர் என்றும் குற்றச்சாட்டுக்கள் கிளம்பி உள்ளன.
3 மணி நேரம்: மேலும், ஆதிபுருஷ் படத்தின் ரன் டைம் 2 மணி நேரம் 59 நிமிடங்கள் என்கிற ஹாட் அப்டேட்டும் வெளியாகி உள்ள நிலையில், இத்தனை நீள அனிமேஷன் படத்தை ரசிகர்கள் எப்படி தியேட்டரில் உட்கார்ந்து பார்க்கப் போகின்றனர் என்கிற கேள்வியையும் ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர்.
ராமாயண கதையை பல பாகங்களாகவே எடுக்கலாம். ஒரே படத்தில் சொல்ல வேண்டும் என்றால் 3 மணி நேரம் கூட இல்லையென்றால் எப்படி என பிரபாஸ் ரசிகர்கள் ஆதிபுருஷ் படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் படங்கள் படு தோல்வியை தழுவி வரும் நிலையில், ஆதிபுருஷ் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும் என உறுதியாக நம்புகின்றனர்.