தானே, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 70 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள ஏழுமலையான் கோவிலுக்கான பூமி பூஜை நேற்று வெகுவிமரிசையாக நடந்தது.
ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலைப் போல், நாடு முழுதும் கோவில்களைக் கட்ட முடிவு செய்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் இதற்கான பணிகளை முழுவீச்சில் செய்து வருகிறது.
சென்னை, புதுடில்லி, ஹைதராபாத், புவனேஸ்வர், கன்னியாகுமரி, ஜம்மு – காஷ்மீர் என ஆறு இடங்களில் கோவில்கள் கட்டப்பட்ட நிலையில், ஜம்முவில் உள்ள கோவிலுக்கு இன்று கும்பாபிஷேக விழா நடக்கிறது. இந்நிலையில், ஏழாவதாக நவி மும்பையில் உள்ள உல்வே பகுதியில் ஏழுமலையானுக்கு கோவில் கட்ட, மஹாராஷ்டிர அரசு நிலம் வழங்கியது.
இதையடுத்து, இங்கு கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில், மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி, நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.
உல்வேயில் உள்ள 10 ஏக்கர் நிலத்தில், 70 கோடி ரூபாய் செலவில் ஏழுமலையான் கோவிலை நன்கொடையாக கட்டித் தர ரேமண்ட் நிறுவன தலைவர் சிங்கானியா முன்வந்துள்ளார். ”திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல முடியாமல் மும்பையில் தவிப்பவர்களுக்கு இந்தக் கோவில் வரபிரசாதமாக அமைவதுடன், மாநிலத்தின் பொருளாதார நிலையையும் உயர்த்தும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் முழு பணியும் நிறைவடையும்” என அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement