Legal Administration Wing of Puducherry Police; Decision to consolidate cases | புதுச்சேரி போலீசில் சட்ட நிர்வாக பிரிவு; வழக்குகளை ஒருங்கிணைத்து வழிகாட்ட முடிவு

புதுச்சேரி: நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்துவிரைந்து முடிப்பதற்கு வழிகாட்ட, புதுச்சேரி போலீஸ் துறையில் புதிதாக மாவட்டசட்டம் மற்றும் நிர்வாக பிரிவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களின் வழக்குகளின்போது சம்மன் மற்றும் வாரண்ட் பிறப்பிக்கப்படுகின்றது. நீதிமன்றத்தில் இருந்து வரும் சம்மனில் எந்த வழக்கு, எந்த கோர்ட்டில், எந்த தேதியில் என விபரம் குறிப்பிடப்பட்டிருக்கும். சம்மன் பெற்றவர் அந்த தேசியில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
ஆனால் பலர் ஆஜராவதில்லை. வழக்கு விசாரணைக்கு ஆஜராகாதவர்களுக்கு நீதிமன்றத்தில் இருந்து கைது வாரண்ட் எனப்படும் பிடியாணை பிறப்பிக்கப்படும். வாரண்ட் பிறப்பித்தும் கைது செய்ய முடியாமல் போகும்போது வழக்கு விசாரணையும் தள்ளி போய் தேவையற்ற காலதாமதத்தினை ஏற்படுத்துகின்றது.

இந்நிலையில் நீதிமன்றங்களில் வழக்குகளை விரைந்து முடிக்க உதவும் வகையில், புதுச்சேரி போலீஸ் துறையில் மாவட்ட சட்டம் மற்றும் நிர்வாக பிரிவு புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எஸ்.பி., தலைமையில் செயல்பட உள்ள இந்த புதிய பிரிவில் ஒரு இன்ஸ்பெக்டர் அல்லது சப் இன்ஸ்பெக்டர், சட்ட புலமைமிக்க இரு ஆயுதப்படை போலீசார் இடம் பெற உள்ளனர்.

பணிகள் என்ன

மாநிலம் முழுவதும் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களில் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள சம்மன், வாரண்ட் வழக்குகளை இக்குழு கவனிக்கும். சம்மன் அல்லது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்.

கொடூர குற்ற வழக்குகள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பந்தப்பட்ட நீதிமன்ற வழக்குகளையும் இந்த பிரிவு நேரடியாக கண்காணித்து வழக்குகளை விரைந்து முடிக்க உதவும்.

மேலும் ரவுடிகள் மீதான குண்டர் சட்ட பரிந்துரைகள், வழக்கின் சாட்சிகள் பாதுகாப்புகளை உறுதி செய்யும். சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் அவ்வப்போது அளிக்கும் வழிகாட்டுதல் நெறிமுறைகளை மாநிலத்தில் செயல்படுத்தி கண்காணிக்கும்.

latest tamil news

அலுவலகம் எங்கே

அரசு வழக்கறிஞர்களுடன் இணைந்து, நீதிமன்றங்களில் அப்பீல், ரிப்போர்ட்ஸ், அபிடவிட் ஆகியவற்றை காலத்தோடு சமர்பிப்பதை புதிய பிரிவு உறுதி செய்யும்.

முக்கிய வழக்குகளில் குற்றவாளிகள் பெயிலில் செல்வதை எதிர்த்து ஆட்சேபனை செய்தல், பல்வேறு கமிஷன்களுக்கு பதில் அளிப்பது, பொதுமக்களிடம் பெறும் புகார்கள் மீதான நடவடிக்கையை இப்பிரிவு கண்காணிக்கவும் உள்ளது. அத்துடன் மாநிலத்தின் குற்ற தரவுகளை ஒருங்கிணைக்கவும் உள்ளது.

இந்த புதிய பிரிவின் அலுவலகம், உருளையன்பேட்டை ரவுடிகள் தடுப்பு பிரிவு அலுவலகத்திலேயே அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.