`அரசியலுக்கு வரப் போகிறார் விஜய்!’ என ஒரு பக்கம் பரபரக்கிறது பேச்சு. இன்னொரு பக்கம், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘விஜய் 68’ அப்டேட்கள் குவிந்து கொண்டிருப்பதால், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘லியோ’வைப் பலரும் மறந்தே விட்டனர். எனவே ‘லியோ’வின் நிலவரம் குறித்து இங்கே பார்ப்போம்!
கமலின் ‘விக்ரம்’ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ், விஜய்யை வைத்து ‘லியோ’வை இயக்கி வருகிறார். விஜய்யுடன், அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், பிரியா ஆனந்த், கதிர், பாபு ஆண்டனி, சாண்டி, மனோபாலா, மன்சூர் அலிகான் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது.
லோகேஷின் மனம் கவர்ந்த அனிருத்தான் இசையமைக்கிறார். ‘பீஸ்ட்’ மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துவருகிறார். ‘லியோ’வின் படப்பிடிப்பு காஷ்மீரைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக சென்னையில் நடந்து வருகிறது. ஈ.வி.பி. திரைப்பட நகரைத் தொடர்ந்து, பிரசாத் ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடந்து வருகிறது.
விஜய்யின் பிறந்தநாள் இம்மாதம் 22ம் தேதி வருவதால் அன்று `லியோ’வின் `க்ளிம்ப்ஸ்’ வீடியோ ஒன்று வெளியாகிறது என்றும், வீடியோவிற்கு கமல் வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கிறார் என்றும் தகவல். அன்றுதான், `விஜய் 68′ படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்படுமெனத் தெரிகிறது.
அன்பறிவ்வின் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள், காஷ்மீரைத் தொடர்ந்து சென்னையிலும் அரங்கம் அமைத்து படமாக்கப்பட்டன. த்ரிஷா காம்பினேஷனில் பாடல்களும் ஷூட் செய்யப்பட்டுவிட்டன. இதற்கிடையே படத்தின் ஓப்பனிங் பாடலை இப்போது எடுத்து வருகிறார்கள். டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடன அமைப்பில் விஜய்யுடன் இணைந்து கல்லூரி மாணவ மாணவியர்கள் நூற்றுக்கணக்கானோர் ஆடி வருகிறார்கள். இதற்காக சில வாரங்களுக்கு முன்னரே தினேஷ் மாஸ்டர், ஏராளமான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து டான்ஸ் ரிகர்சல் கொடுத்து வந்தார். அவர்களுடன் விஜய் ஆடியிருக்கிறார்.
இப்போது எடுக்கப்பட்டு வரும் பாடல் காட்சியினைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் கூட்டணியில் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியினை எடுக்க உள்ளனர். அடுத்த வாரத்தோடு மொத்த படப்பிடிப்பும் நிறைவடைகிறது என்கிறார்கள். படத்தின் கேரளா விநியோக உரிமை, வெளிநாட்டு உரிமை என அத்தனையும் மிகப்பெரிய விலைக்குப் போயிருப்பதாகவும் தகவல்.