புதுடில்லி, ‘ரயில்கள் இயக்கத்தின் செயல்பாடுகளை சீராக மேற்கொள்ளும் வகையில், ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் சிக்னல் கட்டுப்பாட்டாளர் போன்றவர்களுக்கு, அவ்வப்போது உரிய மன நல ஆலோசனைகளை வழங்க வேண்டும்’ என, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சமீபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உட்பட மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.
இதில், 288 பேர் பலியாகினர். ‘இன்டர்லாக்கிங் சிஸ்டம்’ என்ற அமைப்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த குளறுபடியில் ஏதேனும் சதி திட்டம் உள்ளதா என்பது குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ரயில்கள் இயக்கம் சீராக இருக்க வேண்டும். இந்த பணியில் ஈடுபடுவோர், எந்தவித குழப்பமும், மன அழுத்தமும் இன்றி செயல்பட வேண்டும்.
இதற்காக, ‘ஸ்டேஷன் மாஸ்டர், சிக்னல் கட்டுப்பாட்டாளர், பாயின்ட்ஸ் மேன்’ போன்றோருக்கு, அவ்வப்போது மனநல ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
ஏற்னவே சில மண்டலங்களில் இந்த நடைமுறை அமலில் உள்ளது. அனைத்து மண்டலங்களிலும் இதை செயல்படுத்த வேண்டும். இந்த அறிவுறுத்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement