வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டொரன்டோ: போலி கல்லூரி அனுமதி கடிதங்களுடன் வந்து சிக்கியுள்ள பஞ்சாப் உள்பட இந்தியாவைச் சேர்ந்த, 700 மாணவர்கள், கனடாவில் இருந்த வெளியேற்றப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து இந்தியாவை பூர்வீகமாக உடைய எம்.பி.,யின் கேள்விக்கு அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ விளக்கம் அளித்துள்ளார்.
வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ள கல்லூரிகள், பல்கலைகளில் படிப்பதற்காக இந்திய மாணவர்கள் அதிகம் செல்கின்றனர். குறிப்பாக பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் செல்கின்றனர். இவ்வாறு, 2017 முதல் 2020 வரை கனடாவுக்கு சென்ற மாணவர்கள் தற்போது புது சிக்கலில் மாட்டியுள்ளனர்.
இவர்கள் பல்கலைகளில் படிப்பதற்காக கொடுக்கப்பட்ட அனுமதி கடிதங்கள் போலியானவை என்பது தெரியவந்துள்ளது. நிரந்தர குடியுரிமை கேட்டு சில மாணவர்கள் விண்ணப்பித்தபோது, கனடா எல்லை சேவை அமைப்பு இதைக் கண்டுபிடித்தது. இவ்வாறு, 700 மாணவர்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள்.
இந்த மாணவர்களை வெளியேற்றாமல், தொடர்ந்து அங்கு படிப்பதற்கு உதவும்படி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, கனடா பார்லிமென்டில் நேற்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘மோசடிகாரர்களிடம் சிக்கி, இந்த மாணவர்கள் தங்கள் பணம் மற்றும் படிப்பை இழந்துள்ளனர். இவர்களை வெளியேற்றக் கூடாது’ என, அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பார்லிமென்டில் இந்த விவகாரம் தொடர்பாக, இந்தியாவை பூர்வீகமாக உடைய எம்.பி.,யான ஜக்மீத் சிங் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கூறியுள்ளதாவது:
போலி கல்லூரி அனுமதியுடன் வந்துள்ளதால், சில மாணவர்களை வெளியேற்ற வேண்டிய நிலை உள்ளது. அதே நேரத்தில். பாதிக்கப்பட்டவர்கள் எந்த விதத்திலும் தண்டிக்கப்பட மாட்டார். இந்தக் குற்றத்துக்கு காரணமானவர்கள் யார் என்பது கண்டு பிடிக்கப்பட வேண்டும்.
வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், நம் நாட்டுக்கு அளிக்கும் பங்களிப்பை இந்த அரசு மதிக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக கனிவுடன் கவனிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement