டாஸ்மாக் கடைகளில், நிர்ணயம் செய்யப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெறுவதாக சமீப நாட்களாக சர்ச்சை எழுந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு இளைஞர் ஒருவர் சென்றிருக்கிறார். அங்கு, ரூ.160 மதிப்பிலான மதுபான பாட்டில் ஒன்றை அவர் வாங்கியபோது, டாஸ்மாக் ஊழியர் கூடுதலாக 10 ரூபாய் கேட்டாராம். இதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர், “எதற்காக எம்.ஆர்.பி விலையைவிட கூடுதலாகக் கேட்கிறீர்கள்” என்று கேட்டு, அதனை வீடியோ பதிவு செய்திருக்கிறார். அதில் பேசும் டாஸ்மாக் ஊழியர் சிவசுப்பிரமணியம், “இறக்கும் கூலி, உடைந்த பாட்டிலுக்கு காசு நாங்கள்தான் தருகிறோம்.
அரசாங்கம் தரவில்லை. இதெல்லாம் ஒரு வழிமுறைக்கு வந்தால்தான் நடைமுறைக்கு வேலைக்காகும்” என்று பதிலளித்திருக்கிறார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் விளக்கம் கேட்டோம். “அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், எம்.ஆர்.பி விலையில் தான் மதுபானங்களை விற்பனை செய்ய சொல்லியிருந்தோம். இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரித்து வருகிறோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.