தமிழ்நாட்டில் அரசியல் நிகழ்ச்சிகள், ஊர் திருவிழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகள் என எந்த விழா என்றாலும் பெரிய, பெரிய பேனர்கள் வைக்கும் கலாச்சாரம் அதிகரித்துவிட்டது.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அவ்வப்போது உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. உயிரிழப்புகள் ஏற்படும் போது இது குறித்து அரசு அறிவிப்புகளையும், எச்சரிக்கையையும் விடுவதும் பின்னர் கண்டுகொள்ளாததும் தொடர் கதையாகி வருகிறது.
கடந்த ஜூன் 1ஆம் தேதி கோவை அருகே, கருமத்தம்பட்டியில், ராட்சத விளம்பர பேனர் பொருத்தும் பணியின் போது, சாரம் சரிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதில், “தமிழகத்தில் உரிய அனுமதியின்றி பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அமைக்கும் நிறுவனங்கள், தனிநபர், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் மீது ஒரு வருட சிறை தண்டனையோ அல்லது ஐந்தாயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்க வழிவகை செய்யப்படும்.
அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் வரை விதிக்கப்படும்.
உரிமக் காலம் முடிந்தும் பேனர்களை அகற்றாவிட்டால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.
விபத்து நடந்து காயமோ, உயிரிழப்போ ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை வழங்குவது சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது தனி நபரின் பொறுப்பு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.