மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நடப்பாண்டே அரசின் சாதனைகளை பெரிதாக கொண்டாட முடிவு செய்தனர். அதன்படி, அனைத்து மாநிலங்களிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அமித்ஷா வேலூர் வருவதற்கு முக்கிய காரணங்கள் என்ன ?
தமிழக பாஜக ஏற்பாடுகள்
தமிழகத்தை பொறுத்தவரை மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. ஒரே மாதத்தில் 66 பொதுக்கூட்டங்களை நடத்த தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் வரும் 11ஆம் தேதி வேலூரில் நடக்கும் பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்கிறார்.
சென்னை வரும் அமித் ஷா
இதற்கான பயணத் திட்டங்கள் தயார் செய்யப்பட்ட நிலையில், திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக வரும் 11ஆம் தேதி காலை சென்னை வரவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஒருநாள் முன்கூட்டியே, அதாவது ஜூன் 10ஆம் தேதி இரவே சென்னை வருகிறார். அடுத்த நாள் செங்கல்பட்டு மாவட்டம் கோவிலம்பாக்கத்தில் நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
வேலூர் பொதுக்கூட்டம்
அன்றைய தினம் பிற்பகல் வேலூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றவுள்ளார். இதையொட்டி மாநில பாஜக சார்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அமித் ஷாவின் இந்த பயணத்தின் போது, 2024 மக்களவை தேர்தல் வியூகம் குறித்து மூத்த நிர்வாகிகள் உடன் ஆலோசிக்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவை தேர்தல் வியூகம்
தமிழகத்தில் “டார்கெட் 9” என்ற பெயரில் பாஜக மேலிடம் மக்களவை தேர்தலை அணுகவுள்ளது. அதாவது, 9 தொகுதிகளில் எப்படியாவது வெற்றியை பெற்றாக வேண்டும். அந்த லிஸ்டில் கோவை, நீலகிரி, ஈரோடு, சிவகங்கை, கன்னியாகுமரி, சிதம்பரம், ராமநாதபுரம், திருநெல்வெலி, வேலூர் ஆகியவை ஆகும். அமித் ஷா வருகை பாஜக தொண்டர்களை எழுச்சி கொள்ள வைக்கும் என்று கூறுவர்.
விசாகப்பட்டினம் புறப்படுகிறார்
அதேசமயம் சரியாக வேலை செய்யாத நிர்வாகிகளை லெஃப்ட், ரைட் வாங்கி விடுவார். அந்த வகையில் தமிழக பாஜக தொண்டர்கள் புது ரத்தம் பாய்ச்சியதை போல் உணர்கிறதா? இல்லையா? என்பதை அடுத்தடுத்த நகர்வுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். வேலூர் பொதுக்கூட்டத்தை முடித்து கொண்டு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு அமித் ஷா புறப்பட்டு செல்கிறார். அங்கு பாஜகவின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.