மும்பை,
இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. மொத்தம் 48 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் ஆட்டங்கள் என மொத்தம் 51 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
மேலும், 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக ஆசிய கோப்பை தொடரும் நடைபெற உள்ளது. ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெர்வித்ததால் ஆசிய கோப்பை தொடர் எங்கு நடைபெறும் என இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது.
இந்நிலையில், ஆசிய கோப்பை தொடர் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் ஆகியவற்றை இந்தியாவில் உள்ள ஸ்மார்ட் போன் உபயோகிப்பாளர்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இலவசமாக பார்க்கலாம் என ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தாண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரை ஜியோ சினிமாவில் இலவசமாக பார்க்கும் வசதியை அந்நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.