விசாகப்பட்டினம்: ஓய்வு பெறுவதாக அறிவித்த கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு அடுத்த இன்னிங்ஸாக அரசியலில் நுழைய இருக்கிறார் என்கின்றன ஊடக தகவல்கள். ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை அம்பதி ராயுடு சந்தித்ததை தொடர்ந்து இந்த தகவல்கள் பேசுபொருளாகி இருக்கின்றன.
அண்மையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் கோப்பையை வென்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அம்பதி ராயுடு இடம் பெற்றிருந்தார். இத்தொடரும் அவர் தமது ஓய்வு முடிவையும் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஆந்திராவை சேர்ந்த அம்பதி ராயுடுவை தங்களது கட்சிகளில் சேர்க்க பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரம் காட்டினர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாரூதின், அம்பதி ராயுடுவை காங்கிரஸில் இணைப்பதில் மும்முரம் காட்டினார். ஆந்திரா சட்டசபைக்கு லோக்சபா தேர்தலுடன் தேர்தல் நடைபெறுவதால் அம்பதி ராயுடுவை வளைப்பதில் கட்சிகள் மும்முரம் காட்டின.
இந்த நிலையில் ஆந்திரா முதல்வரும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியை நேற்று அம்பதி ராயுடு சந்தித்து பேசினார். அப்போது ஐபிஎல் கோப்பையை ஜெகன் மோகன் ரெட்டியிடம் காண்பித்து வாழ்த்தும் பெற்றார் அம்பதி ராயுடு.
இதனைத் தொடர்ந்து அம்பதி ராயுடு விரைவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸில் இணைவார்; ஆந்திரா சட்டசபை தேர்தல் அல்லது லோக்சபா தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக அவர் போட்டியிடக் கூடும் என ஊடகங்கள் எழுதத் தொடங்கி உள்ளன. அத்துடன் அம்பதி ராயுடுவின் உறவினரான அம்பதி ராம்பாபு, ஜெகன் மோகன் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார் என்பதையும் ஊடகங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
இருப்பினும் அம்பதி ராயுடு தமது அரசியல் பிரவேச முடிவை இன்னமும் அறிவிக்கவில்லை.
ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பிறந்தவர்தான் அம்பதி ராயுடு; ஆனால் வளர்ந்தது எல்லாமே ஹைதராபாத்தில். ஆகையால் தெலுங்கானா மாநில அரசியலிலும் அவரை இழுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படு வருகின்றன.