தென்காசி மாவட்டம், இலத்தூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் தனது வீட்டில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுவந்தார். அதற்காக செப்டிக் டேங்ல்கை கடந்த 4-ம் தேதி திறந்தபோது உள்ளே எலும்புக்கூடு இருந்ததால், அங்கு வேலை செய்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக இலத்தூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அந்த எலும்புக்கூடு அங்கு எப்படி வந்திருக்கக்கூடும் என்பது பற்றியும் விசாரணை நடத்தினர். யாரையோ கொலைசெய்து செப்டிக் டேங்க்கில் போட்டிருக்கக்கூடும் என்பதை உணர்ந்த போலீஸார், அது யார் என்பது பற்றிய விசாரணையைத் தொடங்கினார்கள். அப்போது போலீஸாருக்கு `செக்ஸ் டார்ச்சர் காரணமாக நடந்த கொலை‘ என்பது தெரிந்திருக்கவில்லை.
சவாலான இந்த வழக்கைக் கையிலெடுத்த இலத்தூர் போலீஸார், சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாராவது ஏழு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்களா என்பதை விசாரித்தனர். அப்போது இலத்தூர் பகுதியைச் சேர்ந்த மது என்ற மாடசாமி, ஏழு மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் காணாமல்போயிருப்பது தெரியவந்தது. அது தொடர்பாக இலத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகியிருந்ததுடன், மதுரை உயர் நீதிமன்றக் கிளையிலும் ஆட்கொணர்வு மனு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
அதனால் லட்சுமணன் என்பவரின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு, மது என்ற மாடசாமியுடையதாக இருக்குமா என சோதனை நடந்தது. அதற்காக எலும்புக்கூட்டின் டி.என்.ஏ-வுடன் மதுவின் உறவினர்களின் டி.என்.ஏ பரிசோதனைக்காக ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பப்பட்டது. அதில், இரு டி.என்.ஏ-வும் ஒத்துப்போனதால் உயிரிழந்தது மது என்பது உறுதிசெய்யப்பட்டது.
மதுவை எதற்காக, யார் கொலைசெய்தது என்பது தெரியாததால் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவருக்கு யாரும் எதிரிகள் இல்லை என்று உறவினர்கள் தெரிவித்துவிட்டதால், எதற்காகக் கொலை நடந்திருக்கும் என்பதைக் கண்டுபிடிப்பது போலீஸாருக்குப் பெரும் சவாலாக இருந்தது. அதனால் கடந்த ஏழு மாதங்களில் அந்தப் பகுதியைச் சேர்ந்த யாராவது சந்தேகத்துக்குரிய வகையில் வேறு ஊருக்குச் சென்றிருக்கிறார்களா என விசாரித்தனர்.
அப்போது இலத்தூரில் மதுவின் வீட்டருகே வசித்த மாரியம்மாள், அவருடைய மகள் பேச்சியம்மாள் என்ற பிரியா, மகன் தங்கப்பாண்டி ஆகியோர் வீட்டை காலி செய்துவிட்டு குடும்பத்துடன் கோவைக்குச் சென்றுவிட்டது தெரியவந்தது. அதனால் அவர்களுக்கு மது கொலையில் தொடர்பிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். அதையடுத்து, இலத்தூர் போலீஸார் கோவைக்குச் சென்று மாரியம்மாள் குடும்பத்தினரை விசாரித்தனர்.
போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மதுவைக் கொலைசெய்து, உடலை செப்டிக் டேங்க்கில் வீசியதை மூவரும் ஒப்புக்கொண்டனர். இது குறித்து மாரியம்மாளின் 24 வயது மகள் பேச்சியம்மாள் என்ற பிரியா போலீஸாரிடம் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியளிப்பதாக இருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். போலீஸாரிடம் பிரியா அளித்த வாக்குமூலத்தில், ”நாங்கள் இலத்தூரில் குடியிருந்த வீட்டின் அருகே வசித்த மதுவுடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் நெருக்கமாகப் பழகத் தொடங்கியதும், என்னுடன் மது புகைப்படம் எடுத்துக்கொண்டார். அத்துடன், நாங்கள் நெருக்கமாக இருந்தபோது வீடியோக்களையும் எடுத்தார். அவற்றைவைத்து ஒருகட்டத்தில் என்னை மிரட்டத் தொடங்கினார். அதையடுத்து, நான் அவரிடமிருந்து விலகத் தொடங்கினேன். ஆனால் அவர் என்னை விடவில்லை.
இந்த விவகாரத்தை வீட்டினருக்குத் தெரியப்படுத்தினேன். அதனால் அவரிடமிருந்து விடுதலையாக வேண்டுமானால் அவரைத் தீர்த்துக்கட்ட வேண்டுமென்கிற முடிவுக்கு நாங்கள் வந்தோம். அதனால் வழக்கம்போல நான் மதுவுடன் பழகிக்கொண்டே அவரைத் தீர்த்துக்கட்ட சமயம் பார்த்துவந்தேன். ஒரு நாள் அவர் ஒரு வீடியோவைக் காட்டினார். அதில் ஆணின் கை கால்களைக் கட்டிப் போட்டுவிட்டு உறவில் ஈடுபடுவதுபோல் இருந்தது. அதுபோல நாமும் செய்யலாம் என்று மதுவிடம் சொன்னதற்கு, அவரும் ஒப்புக்கொண்டார்.
அதனால் அவருடைய கை கால்களைக் கட்டிலுடன் சேர்த்துக் கட்டினேன். பின்னர் அவருடன் மகிழ்ச்சியாக இருப்பதுபோல நடித்த நான், ஒருகட்டத்தில் தலையணையால் முகத்தில் அழுத்திக் கொலைசெய்தேன். பின்னர் அவருடைய உடலை மறைக்கத் திட்டமிட்டோம்.
அப்போது லட்சுமணனின் வீட்டில் ஆள் இல்லாமல் இருந்ததால், அந்த வீட்டின் செப்டிக் டேங்க்கை திறந்து உள்ளே உடலைப் போட்டு மூடிவிட்டோம். ஏழு மாதங்களுக்குப் பிறகு போலீஸாரிடம் சிக்குவோம் என்பதை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.
செக்ஸ் டார்ச்சர் காரணமாக மது என்ற மாடசாமியைக் கொலைசெய்த வழக்கில் பேச்சியம்மாள், அவருடைய மகள் பிரியா, மகன் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) ஆகியோரைக் கைதுசெய்த போலீஸார், மூவரையும் செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.