இன்ஸ்டாகிராம் என்பது ஒரு பொழுதுபோக்கு சமூகவலைதளம். அதனைச் சரியாகப் பயன்படுத்துபவர்களைவிட, தவறாகப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அந்தவகையில், குழந்தைகளின் மீது பாலியல் ஈர்ப்பு கொள்பவர்களின் நெட்வொர்க்குகள் (pedophile networks) அதிகரித்துள்ளன. இந்த நெட்வொர்க்குகளின் முக்கிய தளமாக இன்ஸ்டாகிராம் உள்ளது என ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் வால் ஸ்ட்ரீட் இதழின் அறிக்கை தெரிவித்துள்ளது.
சாதாரணமாக இது சம்பந்தப்பட்ட பாலியல் வார்த்தைகளை இன்ஸ்டாவில் தேடுகையில், பாலியல் புனைப்பெயர்களோடு கூடிய இன்ஸ்டா அக்கவுன்ட்டுக்கு நேரடியாகச் செல்கிறது.
அதில் மைனர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் வீடியோக்கள், கன்டென்ட்டுகள் விளம்பரப் படுத்தப்படுகின்றன. இந்த வீடியோக்கள் மிருகத்தனமாகவும், தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளும் வகையிலும் அமைந்துள்ளன.
சில சந்தர்ப்பங்களில், குறிப்பிட்ட பாலியல் செயல்களுக்கு மெனுக்கள் கொடுக்கப்படுகின்றன. அதில் தங்களுக்குத் தேவையானதைத் தேர்வு செய்யும் ஆப்ஷனும் கொடுக்கப்படுகிறது. குறிப்பிட்ட விலையில், குழந்தைகளை நேரில் சந்திக்கும் மீட்டிங்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
அதிர்ச்சிகரமாக இந்த அக்கவுன்ட்டுகளை சிறுவர்கள் நிர்வகிப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, இந்தப் பிரச்னையைத் தீர்க்க, ஒரு பணிக்குழுவை உருவாக்கி இருப்பதாகவும், பாதுகாப்பு வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் அறிவித்துள்ளது.
“குழந்தைகளைத் துஷ்பிரயோகம் செய்வது கொடூரமான குற்றம். மெட்டா குழுக்கள் 2020 மற்றும் 2022-க்கு இடையில் 27 முறைகேடான நெட்வொர்க்குகளை அகற்றியுள்ளன.
மேலும் இந்த ஆண்டு ஜனவரியில் தொழில்நுட்ப நிறுவனத்தின் குழந்தை பாதுகாப்புக் கொள்கைகளை மீறியதற்காக 4,90,000- க்கும் மேற்பட்ட கணக்குகளை முடக்கியது’’ என மெட்டாவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.