வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மற்றும் மாலைதீவின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் ஆகியோரால் இணைந்து தலைமை தாங்கப்பட்ட இலங்கை – மாலைதீவு கூட்டு ஆணைக்குழுவின் நான்காவது அமர்வு 2023 ஜூன் 07ஆந் திகதி கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வெற்றிகரமாக நிறைவுற்றது.
அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்னதாக 2023 ஜூன் 06ஆந் திகதி நடைபெற்ற சிரேஷ்ட அதிகாரிகளின் கூட்டத்திற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் யசோஜா குணசேகர மற்றும் மாலைதீவு வெளியுறவு அமைச்சின் இருதரப்பு விவகார செயலாளர் ஹாலா ஹமீட் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீடு, சுற்றுலா, வேலைவாய்ப்பு, மீன்பிடி, கல்வி, சுகாதாரம் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதில் கூட்டு ஆணைக்குழு கவனம் செலுத்தியது. இந்தப் பகுதிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஈடுபாட்டை வலுப்படுத்தும் முயற்சிகளை தீவிரப்படுத்துவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இரு நாடுகளும் ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களை செயற்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, புதிய ஒப்பந்தங்களை தொடருவதற்கு ஒப்புக்கொண்டன. ஒப்புக் கொள்ளப்பட்ட ஒத்துழைப்பை செயற்படுத்துவதற்கு வசதியாக, வர்த்தகம், மீன்பிடி, சுற்றுலா மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் பணிக்குழுக்களை அமைக்கவும் இரு தரப்பும் தீர்மானித்துள்ளன.
சுற்றுலா மற்றும் மீன்பிடித் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், வேலை வாய்ப்புக்களை விரிவுபடுத்துதல், அத்துடன் மாலைதீவில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை எளிதாக்குதல் தொடர்பான ஒப்பந்தம் உட்பட இலங்கைக்கு பல நன்மையான விளைவுகளை கூட்டு ஆணைக்குழு வழங்கியது. மாலைதீவு மாணவர்கள் மத்தியில் இலங்கையை ஒரு சாத்தியமான கல்வி மையமாக மேம்படுத்துவதற்காக, சலுகை மற்றும் பரஸ்பர அடிப்படையில் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு விசாக்களை வழங்குவதற்கு தேவையான உரிய நடைமுறைகளை நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு இலங்கை விருப்பம் தெரிவித்தது.
கூட்டு ஆணைக்குழுவின் நிறைவில் இரு நாடுகளும் கலாச்சார ஒத்துழைப்பு, சுகாதார ஒத்துழைப்பு மற்றும் இலங்கையில் மாலைதீவு கலாச்சார மையத்தை நிறுவுதல் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
1984 இல் நிறுவப்பட்ட மாலைதீவு – இலங்கை கூட்டு ஆணைக்குழு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகள் மற்றும் உரையாடல்களின் வழக்கமான மற்றும் மிகவும் கட்டமைக்கப்பட்ட மீளாய்வுக்கான தளத்தை வழங்குகின்றது.