\"உக்ரைன் அதிபர் கொல்லப்படுவார்! அதுவும் மேற்குலக நாடுகளால்..\" ரஷ்யா முன்னாள் அதிபர் பரபர! என்னாச்சு

மாஸ்கோ: உக்ரைன் போர் தொடரும் நிலையில், மேற்குலக நாடுகளாலேயே உக்ரைன் அதிபர் கொல்லப்படுவார் என்று ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் பரபர கருத்தைத் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்தாண்டு பிப். மாதம் போரை ஆரம்பித்தது. இந்தப் போர் சில வாரங்களில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது இப்போது ஓராண்டைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. போர் முடிவுக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகளே தெரியவில்லை.

உண்மையில் உக்ரைன் போர் ஆரம்பித்த சமயத்தில் பல பகுதிகளை ரஷ்யா மளமளவெனக் கைப்பற்றியது. அதன் பின்னரே இந்தப் போர் ரஷ்யா கையை விட்டுப் போகத் தொடங்கியது. அதற்கு உக்ரைன் வீரர்கள் போரிட்டது ஒரு காரணம் என்றால் மேற்குலக நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் மற்றொரு முக்கிய காரணம்.

முன்னாள் ரஷ்ய அதிபர்: போர் நடக்கும் போது கடந்தாண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு முக்கிய ஆயுதங்களை வழங்கினர். ரஷ்யாவின் தாக்குதலைச் சமாளிக்க இதுவே உக்ரைனுக்குப் பெரியளவில் உதவியது. இதனிடையே இந்த ஆயுதங்களே இப்போது உக்ரைனுக்கு எதிராகத் திரும்பும் என்று ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து டிமிட்ரி மெட்வெடேவ் தனது டெலிகிராம் பக்கத்தில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “மேற்குலக நாடுகளிடம் இருந்து உக்ரைன் அதிகப்படியாக ஆயுதங்கள் மற்றும் பணத்தை வாங்கியுள்ளது. இதை நியாயப்படுத்த ரஷ்யா மீது நடத்தும் எதிர்த் தாக்குதலை உக்ரைன் தொடர்ந்து விளம்பரப்படுத்தி வருகிறது. உக்ரைன் அதன் மேற்கத்திய எஜமானர்கள் செய்த முதலீட்டிற்கு எதாவது திரும்பத் தர வேண்டும்.

என்ன காரணம்: இல்லையென்றால், அது உக்ரைன் அதிபர் ஜெலஸ்ன்கி உட்பட அனைவருக்கும் சிக்கலைத் தரும். அவர்கள் பதவியை மட்டும் இழக்க மாட்டார்கள். உயிரையே இழக்கும் சூழலுக்கும் கூட தள்ளப்படலாம். உக்ரைன் நாட்டிற்குப் பல பில்லியன் டாலரை மேற்குலக நாடுகள் கொடுத்துள்ளன. இப்போது அந்த மேற்குலக நாடுகள் உக்ரைன் மீது ஏமாற்றத்தில் உள்ளன.. அமெரிக்க ஏஜென்ட்கள் பலரும் உக்ரைன் உளவுப் பிரிவில் உள்ளனர்.

அமெரிக்கப் பணத்தை வீணடித்ததற்காக இந்த அமெரிக்க ஏஜெண்ட்கள் எல்லாம் ஒன்றிணைந்து உக்ரைன் அதிபரைத் தீர்த்துக் கட்டவும் வாய்ப்பு இருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு இப்போது வேறு வழியே இல்லை. அவர்கள் மேற்குல நாடுகளிடம் இருந்து அதிகப்படியான பணம் மற்றும் ஆயுதங்களை வாங்கியுள்ளனர். அதை நியாயப்படுத்த அவர்கள் தாக்குதல் நடத்தியே ஆக வேண்டும். ஏற்கனவே, மேற்குலக நாடுகள் அதிருப்தியில் உள்ளதால் ஜெலன்ஸ்கிக்கு வேறு வழியே இல்லை.

என்ன நடக்கும்: உக்ரைன் தலைமையைப் பொறுப்பில் அமெரிக்கா வேறு ஒருவரையும் கூடக் கொண்டு வரக் கூடும். ஜெலென்ஸ்கியை ஒழித்துக்கட்டும்படி கட்டளையிட வாய்ப்பு உள்ளது. இதனால் கடைசிக் கட்டமாக உக்ரைன் பல ஆயிரம் வீரர்களைத் திரட்டி ரஷ்யாவுடன் மோத வைப்பதே மட்டுமே ஒரு வாய்ப்பாக உள்ளது. இதை நாம் அனுமதிக்கவே கூடாது.

மேற்குலக நாடுகளால் கட்டுப்படுத்தப்பட்டு வரும் நாஜி உக்ரைன் ஆட்சியை முழுமையாகத் தூக்கியெறிய ரஷ்யா ஒரு தீவிர தாக்குதலை நடத்த வேண்டும்.. உக்ரைன் இதேபோல மேற்குலக நாடுகளைச் சார்ந்தே இருந்தால் இதற்கு உரிய எதிர்காலம் இருக்காது.. அதன் சரிவையும் நம்மால் தவிர்க்க முடியாது.. 2014இல் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியாவை திரும்பப் பெற உக்ரைன் முயன்றால், அது இந்த போர் பல ஆண்டுகள் நீட்டிக்கக் காரணமாக அமைந்துவிடும்” என்று அவர் தெரிவித்தார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.