என்சிபி தலைவர் சரத் பவாருக்கு மிரட்டல்: உள்துறை அமைச்சர் தலையிட சுப்ரியா சுலே வலியுறுத்தல்

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு தனது வாட்ஸ் அப்பில் மிரட்டல் செய்தி விடுக்கப்பட்டுள்ளதாக அவரது மகளும், அக்கட்சியின் எம்.பி.யுமான சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தலைவராக சமீபத்தில் மீண்டும் சரத் பவார் தேர்வு செய்யப்பட்டார். மகாராஷ்டிராவில் என்சிபி, சிவசேனா (உத்தவ் அணி),காங்கிரஸ் இடையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியின் முக்கியமான அங்கமாக இருக்கும் சரத் பவார், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமையில் முக்கிய பங்காற்றக் கூடியவராகவும் கருதப்படுகிறார். இந்தநிலையில், அவரது மகளும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான சுப்ரியா சுலே சரத் பவாருக்கு வாட்ஸ் அப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசியுள்ள சுப்ரியா, எனது வாட்ஸ் – அப்பில். சரத் பவார் சாஹேப்புக்கு எதிராக மிரட்டல் செய்தி வந்துள்ளது. இணையம் மூலமாக அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதனால் நான் நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையம் வந்துள்ளேன். இந்த விவாகாரத்தில் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரும் உடனடியாக தலையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இது போன்ற மலிவான அரசியல் நிறுத்தப்பட வேண்டும்.

சரத் பவாரின் பாதுகாப்பு பொறுப்பு உள்துறை அமைச்சகத்திடம் இருக்கிறது. உள்துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். சரத் பவார் இந்த நாட்டின் தலைவர். அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக நான் போலீஸாரிடம் தெரிவித்துள்ளேன். அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்” இவ்வாறு சுப்ரியா கூறியுள்ளார்.

மகராஷ்டிரா மாநிலத்தில் 48 மக்களவைத் தொகுதிகளும், 288 சட்டப்பேரவைத் தொகுதிகளும் உள்ளன. மக்களவைத் தேர்தலில் இம்மாநிலத்தின் பங்கு கணிசமாக உள்ளது. இதன் காரணமாக, மத்தியில் ஆட்சி அமைக்க முயலும் கட்சிகளின் பார்வையில் இம்மாநிலம் முக்கிய இடத்தைப் பிடிப்பது வழக்கம்.

இந்தவகையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணிக்கும் மகராஷ்டிரா, ஒரு முக்கிய மாநிலம். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேஜமுவின் உறுப்பினர்களான சிவசேனாவிற்கு 19, பாஜகவிற்கு 23 கிடைத்தன. ஆனால் ஆட்சி அமைப்பதில் சிவசேனா, பாஜகவிற்கு இடையே என்பதில் சிக்கல் எழுந்தது. இதற்கு இடையில் புகுந்த என்சிபியின் தலைவர் சரத்பவார், மகா விகாஸ் அகாடி எனும் பெயரில் ஒரு புதிய கூட்டணியை அமைத்தார்.

அதில், தம் கட்சியுடன் எதிர்முனைகளான சிவசேனா, காங்கிரஸை இணைத்து ஆட்சி அமைத்தார். இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவின் கிளர்ச்சியால் இந்தக் கூட்டணி ஆட்சியை இழந்தது.

இந்தநிலையில் என்சிபியில் பிளவு ஏற்பட்டு அஜித்பவார் தலைமையில் பாஜக ஆட்சி தொடரும் என்ற பேச்சுக்கள் சமீபத்தில் அம்மாநிலத்தில் எழுந்தது. இதை சமாளிக்க சரத்பவார் எழுதிய ராஜினாமா கடிதம், அம்மாநிலத்தின் அரசியல் சூழலை திசை திருப்பியது. கடிதத்தை வாபஸ் பெறவேண்டும் என்று அக்கட்சித் தொண்டர்கள் முதல் தேசிய அளவில் அனைத்து தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தனர். இதனைத் தொடர்ந்து அவர் கட்சியின் தலைவராக தொடர சம்மதம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.