எலேய்.. ஹேப்பி நியூஸ் சொல்லிருக்காவோ.. நெல்லைக்கும் வந்தாச்சு 'வந்தே பாரத்' ரயில்!

சென்னை:
நெல்லைக்காரர்ளுக்கு இதை விட இனிப்பான செய்தி இருக்க முடியுமா என்று தெரியவில்லை. அப்படியொரு செய்தியை தான் தெற்கு ரயில்வே கூறியிருக்கிறது. ஆம்., சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

நாட்டிலேயே மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக விளங்கும் ரயில்வே துறையில் பல அதிரடி மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்து கொண்டிருக்கிறது.

ரயில்களில் பயணிகளுக்கான வசதிகளை அதிகப்படுத்துதல், வேகத்தை அதிகப்படுத்துதல், டிக்கெட் புக் செய்வது, கேன்சல் செய்வதை கணினிமயமாக்குதல் என மேலை நாடுகளில் இருப்பதை போன்ற வசதிகள் இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

சகல வசதிகள்:
இதன் ஒருபகுதியாகவே, வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஏசி வசதி, தானியங்கி கதவு, பெரிய ஜன்னல்கள், உணவு விநியோகம், ஜிபிஎஸ், வைஃபை என சகல வசதிகளும் இருப்பதால் வந்தே பாரத் ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் மவுசு அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது பல்வேறு வழித்தடங்களில் 19 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை டூ மதுரை:
தமிழகத்தை பொறுத்தவரை, சென்னையில் இருந்து கோவைக்கும், சென்னையில் இருந்து மைசூருக்கும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இருந்து மதுரைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விரைவில் விடப்படவுள்ளது. இந்த அறிவிப்பு தென் மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற போதிலும், இந்த சேவையை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என பெரும்பாலானோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

நெல்லை வரை நீட்டிப்பு:
ஏனெனில் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்பவர்களை போல நெல்லைக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம். எனவே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தக் கோரிக்கையை பரிசீலித்த தெற்கு ரயில்வே, வந்தே பாரத் ரயிலை நெல்லை வரை இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே கூடுதல் பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் சென்னை டூ நெல்லை வரை விரைவில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.