தமிழகத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் இருந்து வருகின்றன. இதுகுறித்து மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த அமைச்சர் ‘ எல்லா டாஸ்மாக் கடைகளிலும் அப்படி இல்லை.. நீங்கள் தமிழகத்தில் உள்ள எல்லா கடைகளுக்கும் போனீர்களா? என்று குதர்க்கமாக கேள்வி எழுப்பினார்.
அதற்கு பத்திரிகையாளர் தரப்பில், ‘ ஒரு அமைச்சராக இல்லாமல் சாதாரண மனிதராக என்னுடன் வண்டியில் வாருங்கள்.. உங்களுக்கே தெரியும்’ என கூறினார். இருப்பினும் அந்த குற்றசாட்டை மறுத்த அமைச்சர் கடந்து சென்றார். அதற்கு பின்னர் டாஸ்மாக் துறை அலுவலகர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தி முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்தார்.
அதன்படி, ‘ எந்தவொரு மாவட்டத்திலும் மதுபான வகைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யக்கூடாது. ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால், அதற்குரிய அபராதம் வசூலிக்கப்பட வேண்டும், அப்பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டிருந்தார்.
இருப்பினும் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிக்கும் முறை இன்னமும் முடிவுக்கு வரவில்லை. பல டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் கூடுதலாக வசூலிக்கும் 10 ரூபாயை திரும்ப கொடுக்குமாறு கேட்கின்றனர். ஆனால், ஊழியர்களோ ‘ ஏகப்பட்ட செலவு இருக்கு.. அதெல்லாம் கொடுக்க முடியாது.. இஷ்டம் இருந்தா வாங்கு இல்லனா பாட்டிலை கொடுத்துவிட்டு போ’ என்று எகத்தாளமாக பதில் அளிக்கின்றனர்.
இவ்வாறு ஒரு ஒரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் வசூல் செய்து அந்த பணத்தின் மூலம் கிடைக்கும் சம்பளம் வாங்கிக்கொண்டு ஊழியர்கள் எகத்தாளமாக பேசினால் நாளடைவில் சட்டஒழுங்கு பிரச்சினைக்கு வழிவகுக்கும் என பலர் எச்சரிக்கின்றனர். இந்த நிலையில், அது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்தாவது அமைச்சர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த விவகாரத்தில் மிக தீவிரமாக கவனம் செலுத்தி கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.