மதுரை முதல் செங்கோட்டை வரை புதிதாக நான்குவழிச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்குத் தேவைப்படும் மண், ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து கொண்டுவரப்படுகிறது. இந்த நிலையில் நான்குவழிச் சாலை பணிகளுக்காக, ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சிக்குட்பட்ட துலுக்கன்குளம் கன்மாயில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாகப் புகார் எழுந்தது. இதுபற்றி தகவலறிந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், உடனே கண்மாய்க்குச் சென்று திடீர் ஆய்வு நடத்தினார்.
அப்போது, வேறொரு தாலுகாவில் மண் அள்ளுவதற்காக வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி முறைகேடாக ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதி கண்மாயில் மண் அள்ளியது தெரியவந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, முறைகேடாக மண் அள்ளி வந்த லாரிகளை மான்ராஜ் எம்.எல்.ஏ சிறைப்பிடித்தார். இது குறித்து வருவாய்த்துறையினர், காவல்துறையினர் ஆகியோருக்கு எம்.எல்.ஏ தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்துக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மான்ராஜ் எம்.எல்.ஏ, சாலைமறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், மான்ராஜ் எம்.எல்.ஏ-விடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, முறைகேடாக மண் திருட்டில் ஈடுபட்டோர்மீது வழக்கு பதிவுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வினரின் மறியல் முயற்சி கைவிடப்பட்டது. இதையடுத்து, சிறைப்பிடிக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய மான்ராஜ் எம்.எல்.ஏ, “ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் முறைகேடாக மண் அள்ளிய திருட்டு கும்பல்மீதும், அதற்கு துணைப்போன அரசு அதிகாரிகள்மீதும் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பொதுமக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என எச்சரித்தார்.