சென்னை: திருத்தியமைக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு திட்டத்தின் மூலம், பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளுக்கான கட்டணங்களை தவணை முறையில் செலுத்தலாம் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களான அழைத்தால் இணைப்பு (மையப் பகுதிகளுக்கும்–Core Areas) மற்றும் இல்லந்தோறும் இணைப்பு (விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கும்-Added Areas) கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், குடிநீர் இணைப்பு மற்றும் கழிவுநீர் இணைப்புகளை எளிதில் பொதுமக்கள் பெறக்கூடிய வகையில் மேற்கூறிய திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு புதிய திருத்தப்பட்ட குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு திட்டத்துக்கு நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம், பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு குடிநீர், கழிவுநீர் இணைப்பைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதி பணிமனை அலுவலகங்களில் நேரிடையாகவும், தொலைபேசி எண்.(044-45674567) மற்றும் இணையதளம் (https://cmwssb.tn.gov.in) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். உரிய ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் ஆவணங்கள் உரிமையாளரிடம் சரிபார்க்கப்பட்டு குடிநீர்/கழிவுநீர் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
> சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று சட்டம், 1978-ன்படி விண்ணப்பதாரரின் ஒப்புதல் பெற்று நுகர்வோருக்கு குடிநீர்/கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்படும்.
> குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளுக்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பின்னர் உரிய பரிசீலனை மேற்கொள்ளப்படும். அதன் பின்னர், இணைப்பிற்குரிய முழுத் தொகையையோ அல்லது முதல் தவணைத் தொகையையோ செலுத்தியவுடன் இணைப்புகள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
> மேலும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள (BPL) பிரிவினருக்கு இணைப்புக் கட்டணமாக ரூ.100 மட்டும் வசூலிக்கப்படும். இவர்களுக்கு வழங்கப்படும் குடிநீர்/கழிவுநீர் இணைப்புகளுக்கான கட்டணங்கள் (சாலை வெட்டு மறுசீரமைப்புக்கான கட்டணங்கள் உள்பட) சென்னை குடிநீர் வாரியத்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.
> தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய (G+1) மாடி கட்டிடங்கள் (குடியிருப்புகள் மற்றும் பகுதி வணிக கட்டிடங்கள்) 1800 சதுர அடி வரை இணைப்புக் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள் (உள்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணங்கள் உள்பட) அனைத்து கட்டணங்களும் ஒரே தவணையாகவோ அல்லது 10 தவணைகளில் (ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஐந்து ஆண்டுகளில்) செலுத்தலாம்.
> தரை தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கூடிய (G+2) மாடி கட்டிடங்கள் (குடியிருப்புகள் மற்றும் பகுதி வணிக கட்டிடங்கள்) மற்றும் வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய 3 மாடி கட்டிடங்கள் (Stilt +3) 2700 சதுர அடி வரை குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கு இணைப்புக் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள் (உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் கட்டணங்கள் உள்பட) அனைத்து கட்டணங்களையும் ஒரே தவணையாகவோ அல்லது மூன்று தவணைகளில் (ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, 18 மாதங்களில்) செலுத்தலாம்.
> பிற வகையான கட்டிட உரிமையாளர்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெறவிருக்கும் கட்டிடத்தின் கட்டுமானப் பணி நிறைவு பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பித்து கழிவுநீர் மற்றும் குடிநீர் இணைப்பிற்கான முழு கட்டணத் தொகையினை ஒரே தவணையாக செலுத்தி இணைப்பை பெற்றுக் கொள்ளலாம்.
> குடிநீர் வழங்கல்/கழிவு நீரகற்றல் இணைப்புகள் வழங்குவதற்கான அமைப்பு தயாரானதும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இணைப்புகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 24 மணி நேரத்திற்குள் சாலைகள் சீரமைக்கப்படும். மேலும், சாலை மறுசீரமைப்பு கட்டணங்களையும் பொதுமக்கள் தவணை முறையில் செலுத்தலாம். குடிநீர்/கழிவுநீர் இணைப்புகளுக்கான கட்டமைப்புகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள இடங்களில், வீட்டின் சுற்றுச்சுவர் வரையிலான சாலை வெட்டு சீரமைப்பு கட்டணங்களை செலுத்த வேண்டியதில்லை.
> குடிநீர்/கழிவுநீர் இணைப்புக் கட்டணங்கள், கட்டிடம் கட்டப்பட்ட மொத்த பரப்பளவின் அடிப்படையில் வசூலிக்கப்படும். குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புக் கட்டணம்/வைப்புத் தொகை ஆகியவை ஏற்கெனவே உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்தப்பட்டிருந்தால், இணைப்பு வழங்கும்போது அந்த தொகை ஈடு செய்யப்படும்.
> விண்ணப்பதாரர்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புக் கட்டணங்களை இணைய வழியிலான கட்டண நுழைவாயிலைப் (online Gate Way) பயன்படுத்தியோ, ரொக்கமாகவோ அல்லது வங்கி வரைவோலை (Demand Draft) மூலமாகவோ அனைத்து பகுதி அலுவலகங்கள்/பணிமனை அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் செலுத்தலாம்.
> பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பழைய உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புப் பெறுவதற்கான கட்டணங்களை ஏற்கெனவே செலுத்தியிருந்தால், புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் பழைய PVC குடிநீர் குழாயை மாற்றி புதிய DI குழாய்கள் பதித்து குடிநீர் இணைப்புகள் எவ்வித கட்டணமுமின்றி வழங்கப்படும்.
எனவே, பொதுமக்கள் புதிய திருத்தப்பட்ட குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு திட்டத்தின் மூலம் எளிய முறையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பினைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுதொடர்பான விவரங்களுக்கு 044-4567 4567 என்ற தொலைபேசி எண்ணிலும், https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.