திருச்சி: தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தூர்வாரும் பகுதிகளை ஆய்வு செய்த பின்னர் முதல்வர் மு க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் அமைச்சரவையில் மாற்றம் வருமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. முதல்வர் ஸ்டாலினின் ஒரு இலாக்காவையும் சேர்த்து மொத்தமாக 11 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டன. உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை வழங்கப்பட்டது. அதேபோல் சிறப்பு திட்ட செயலாக்கம் துறை வழங்கப்பட்டு உள்ளது.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆனது மட்டுமின்றி பல மூத்த அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்பட்டு இருந்தன. ஐ பெரியசாமி, ராஜகண்ணப்பன், முத்துசாமி, பெரியகருப்பன், சேகர் பாபு, ராமசந்திரன், காந்தி, பிடிஆர், மெய்யநாதன், மதிவேந்தன் ஆகியோரின் இலாக்காக்கள் மாற்றப்பட்டன. விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யனாதனுக்கு, சுற்றுசூழல் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சிறப்பு அமலாக்கத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனினும் மூத்த அமைச்சர்களின் இலாக்கக்களில் எதுவும் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், கடந்த மே 11 ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவையில் பல்வேறு சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது.
அதாவது, பால்வளத்துறை அமைச்சர் நாசர் அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டார். அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பிறகு அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் இன்று திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் மு.க ஸ்டாலினிடம் செய்தியாளர்கள், உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக ஆக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறதே எனவும் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா? எனவும் கேள்வி எழுப்பினர்.
இதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த முதல்வர் மு.க ஸ்டாலின், தற்போது வரும் செய்திகள்படி, மத்திய அரசின் அமைச்சரவையில் தான் மாற்றம் வரும் என செய்திகள் வருகின்றன’ என்றார். ஸ்டாலின் நிருபரை நோக்கி கிண்டலாக இவ்வாறு கூறியதும், சுற்றிலும் நின்ற அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துரைமுருகன் ஆகியோர் “கொல்” என்று சத்தம் போட்டு சிரித்தனர். இந்த பதிலை திமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் சிலாகித்து பரப்பி வருகிறார்கள்.
இதனிடையே, டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் எண்ணம் உள்ளதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதல்வர் மு.க ஸ்டாலின், ஏற்கனவே அது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. 500 கடைகள் குறைப்பதாக அறிவித்து இருக்கிறோம்” என்றார்.