மும்பை: தனக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து தான் அச்சப்படவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மகாராஷ்ட்ராவின் மூத்த தலைவருமான சரத் பவாருக்கு ஃபேஸ்புக் குறுஞ்செய்தி மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. அந்த செய்தியில், ‘நரேந்திர தபோல்கருக்கு என்ன நேர்ந்ததோ அது விரைவில் உங்களுக்கும் நேரும்’ என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, கட்சித் தலைவர்களுடன் மும்பை காவல் ஆணையர் விவேக் பன்சால்கரை இன்று சந்தித்த சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, இந்தக் கொலை மிரட்டல் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், சரத் பவாரின் பாதுகாப்புக்கு மாநில மற்றம் மத்திய உள்துறை அமைச்சர்கள்தான் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், தனக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், “நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க உரிமை இருக்கிறது. அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்த உரிமை உண்டு. இதுபோன்று அச்சுறுத்தல் விடுப்பதன் மூலம் ஒருவர் பேசுவதை நிறுத்தி விடலாம் என சில நேரங்களில் சிலர் கருதுகிறார்கள். ஆனால், இது தவறான எண்ணம். காவல் துறை மீதும், சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் மீதும் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. எனவே, இந்தக் கொலை மிரட்டல் குறித்து நான் அச்சம் கொள்ளவில்லை” என தெரிவித்தார்.
முன்னதாக, இந்தக் கொலை மிரட்டல் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “சரத் பவார் மகாராஷ்ட்ராவின் மூத்த, மதிப்புமிக்க தலைவர். அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடத்த காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். தேவைப்படின், சரத் பவாருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கவும் அறிவுறுத்தி உள்ளேன்” என தெரிவித்திருந்தார்.