கோடை மழை, சூறைக் காற்றால் சேதமான பயிர்களுக்கு உடனடி நிவாரணம் – அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: தமிழகம் முழுவதும் கோடை மழை மற்றும் சூறைக் காற்றால் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த ஜூன் 5-ம் தேதி சூறைக் காற்று மற்றும் இடி, மின்னலுடன் கோடை மழை பெய்ததால், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கீழக்கரை, ஒதடிக்குப்பம், அரசடிக்குப்பம், கீரப்பாளையம், வெள்ளகரை, கொடுக்கன்பாளையம், ராமாபுரம், அன்னவல்லி மற்றும் காரைக்காடு ஊராட்சிகளுக்கு உட்பட்ட 20 கிராமங்களில், 1,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு பயிர்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. அதேபோல, தேக்கு, பலா போன்ற மர வகைகளும் சேதமடைந்து, விவசாயிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர்.

இதேபோல, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதிக்கு உட்பட்ட எருமனூர், ராசாபாளையம், தொட்டிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் வாழை மற்றும் கரும்பு சாகுபடி செய்திருந்த நிலையில், திடீரென சூறாவளிக் காற்று வீசியதால் 1,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் மற்றும் பலா மரங்கள் போன்றவை சேதமடைந்துள்ளன. இதனால், லட்சக்கணக்கில் நஷ்டம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், சூறைக் காற்றுடன் கூடிய கோடை மழையால், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முருங்கை மரங்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

கடலூர் மாவட்டத்தில் சூறைக் காற்று மற்றும் மழையால் சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிடவந்த அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், பயிர்களை இழந்து வேதனையில் இருக்கும் விவசாயிகளுக்கு ஆறுதல் கூறாமல், அவர்களை மிரட்டி இருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது.

எனவே, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சமீபத்தில் பெய்தகோடை மழை மற்றும் சூறைக் காற்றால் சேதமடைந்த பயிர்களை உடனடியாக கணக்கெடுத்து, விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.