தமிழக அமைச்சர்கள் பொறுப்பற்ற முறையில் வார்த்தைகளை விடக்கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கோவை சின்னியம்பாளையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் மின்கட்டணத்தை மீண்டும் உயர்த்த திமுக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த அறிவிப்பானது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல உள்ளது. எனவே அரசு மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது. அந்த எண்ணத்தையும் கைவிட வேண்டும்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் நிலவும் சட்டம் -ஒழுங்கு பிரச்சினைக்கு முக்கிய காரணமே டாஸ்மாக் கடைகள் தான். இதனால் பல வழிகளில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அதிகம் கூடக் கூடிய இடங்களில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி அதனை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மேலும் அவர், “தமிழக அமைச்சர்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை பார்த்து பேச வேண்டும். பொறுப்பற்ற முறையில் வார்த்தைகளை விடக்கூடாது. அவர்கள் மற்றவர்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.
அடுத்த மாதம் 15-ந் தேதி மூப்பனாரின் பிறந்த நாளையொட்டி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தஞ்சையில் மிக பிரமமாண்டமாக மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்துகட்சி தலைவர்களும் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்படும்” என்று கூறினார்.