சென்னையில் குடித்து விட்டு கார் ஓட்டிய சினிமா பிரமுகருக்கு, போலீஸ் வாகன சோதனை குறித்து தகவல் சொல்வதற்காக முன்னால் இரு சக்கரவாகனம் ஓட்டி சென்ற துணை நடிகர், அந்த குடிகார கூட்டாளியின் கார் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மனைவியும் , 2 வயது மகளும் , பெற்றோரும் உற்றாரும் தவிக்க… ராகவா லாரன்ஸ் நிறுவன மேலாளர் பழனியப்பன் போதையில் ஓட்டிச்சென்ற கார் மோதி பலியான துணை நடிகர் சரண்ராஜ் இவர் தான்..!
சென்னை மதுரவாயல், தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சரண்ராஜ் . 29 வயதான இவர் சொந்தமாக கட்டுமான தொழில் செய்து கொண்டே அசுரன், வடசென்னை உள்ளிட்ட படங்களில் துணை நடிகராகவும் நடித்துள்ளார்.
சரண்ராஜும் , பழனியப்பனும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். சரண்ராஜுக்கு படங்களில் துணை நடிகராக வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்ததால் பழனியப்பன் சொல்லும் வேலைகளை செய்து கொடுத்து வந்துள்ளார். குறிப்பாக இரவு நேரங்களில் அளவுக்கதிகமாக மது அருந்தும் பழக்கம் கொண்ட பழனியப்பன், போதை அதிகமாகி கார் ஓட்டிச்சென்ற போது ஒரு முறை போலீசில் சிக்கி உள்ளார் . அப்போது முதல் போதை அதிகமானால் அவர் சரண்ராஜை அழைத்து காரை ஓட்டச்சொல்வார் அல்லது காருக்கு முன்னால் சென்று போலீசார் வாகன சோதனை செய்கிறார்களா ? என்று உளவு பார்த்து போதையில் கார் ஓட்டும் பழனியப்பனை எச்சரித்து மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்துவார் என்று கூறப்படுகின்றது.
கட்டுமான தொழிலில் நல்ல வருமானம் வந்த நிலையில் தனது கணவர், பழனியப்பனுக்கு அடிமை போல வேலை செய்வதை சரண்ராஜின் மனைவி விரும்பவில்லை. மனைவி சத்தம் போட்டதால் அவரும், பழனியப்பனிடம் இனி என்னை அழைக்காதீர்கள் என்று சொல்லி விட்டதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் திங்கட்கிழமை இரவு போதை தலைக்கேறிய நிலையில் பழனியப்பன், மீண்டும் சரண்ராஜை வற்புறுத்தி அழைத்ததாக தெரிகிறது. அங்கு சென்று கார் ஓட்ட மறுத்த அவர், பழனியப்பனின் காருக்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற போது இரவு 11.30 மணி அளவில் கே.கே.நகர் ஆற்காடு சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டோடு சேர்த்து சரண்ராஜின் இரு சக்கர வாகனத்தின் மீது பழனியப்பனின் கார் அதிவேகத்தில் மோதியது
மோதிய வேகத்தில் உடல் நசுங்கி சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக சரண்ராஜின் குடும்பத்தில் உள்ள எவருக்கும் தகவல் சொல்லாத பழனியப்பன், காரில் இருந்த கூட்டாளிகளின் துணையுடன் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சரண்ராஜ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பழனியப்பன் விருகம்பாக்கம் நேசனல் திரையரங்கு அருகில் உள்ள பாரில் மது அருந்திவிட்டு காரை ஓட்டி வந்ததும் அங்கிருந்து புறப்பட்ட சிறிது தூரத்திலேயே சரண்ராஜ் மீது கார் மோதியதும் தெரியவந்தது.
இதனையடுத்து பழனியப்பனை கைது செய்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார், விபத்து ஏற்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
போதையில் இருந்த பழனியப்பனுக்கு கார் ஓட்ட மறுத்தார் என்பதற்காக ஆத்திரத்தில் திட்டமிட்டு காரை ஏற்றி சரண்ராஜ் கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது சகோதரர் ரங்கநாதன் குற்றஞ்சாட்டினார்.
கணவரை பறிகொடுத்த சோகத்தில் சரண்ராஜின் மனைவி 2 வயது மகளுடன் தவித்து வருகின்றார்
முதற்கட்டமாக விபத்து வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இந்த சம்பவம் கொலையா ? விபத்தா ? என்று போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.