`செல்வராகவன் சார் போன் நம்பர் என்கிட்ட இல்ல'- வைரல் போட்டோ குறித்து 'காதல் கொண்டேன்' சுதீப் பேட்டி

`காதல் கொண்டேன்’ பட ஹைடெக் இளைஞர் ஆதியா இது?’ என்று அப்படத்தின் செகெண்ட் ஹீரோவாக நடித்த, சுதீப் சாரங்கியின் புகைப்படத்தை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து ‘உச்’ கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

டாக்ஸி டிரைவர் கெட்டப்பில் சுதீப் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்த புகைப்படம் அதிவேகமாக வைரலாகிக்கொண்டிருக்கிறது. ‘காதல் கொண்டேன்’ பட ஹீரோ தனுஷாக இருந்தாலும் அவருக்கு இணையான கதாபாத்திரம் சுதீப்புக்கும் கொடுக்கப்பட்டது.

‘தேவதையைக் கண்டேன்’, ‘காதல் காதல்’ என பாடல்களிலும் திரையை ஆக்கிரமித்து ரசிகர்களின் இதயங்களையும் கொள்ளையடித்தவர் சுதீப். அதனால்தான், ‘காதல் கொண்டேன்’ வெளியாகி 20 வருடங்களை நெருங்கினாலும் ரசிகர்களால் ஆதியை மறக்க முடியவில்லை. ‘ஆதிக்கு இந்த நிலைமையா?’ என்று அக்கறையுடன் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் மும்பையில் இருக்கும் ஆதியை போனில் தொடர்புகொண்டு “எப்படி இருக்கிறீர்கள்?” என்றேன். “என்னை வாழவைத்த தமிழ் சினிமாவால் ரொம்ப சூப்பரா இருக்கேன்” என்றபடி ‘காதல் கொண்டேன்’ நினைவுகளுடன் பேச ஆரம்பித்தார்.

சுதீப் சாரங்கி

“காதல் கொண்டேன் வெளியாகி இத்தனை வருடங்கள் கடந்தும், தமிழ் மக்கள் என்னை மறக்காமல் இருப்பது நெகிழ்ச்சியாக உள்ளது. ‘காதல் கொண்டேன்’ எனது முதல் படம். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது கடவுளின் ஆசிர்வாதம்தான். குறிப்பாக, இந்த நேரத்தில் படத்தைத் தயாரித்த கஸ்தூரிராஜா சார், செல்வராகவன் சார், தனுஷ் சார் மூவருக்கும் பெரிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது ஒரேயொரு போட்டோவைப் பார்த்துதான், செல்வராகவன் சார் ஆதி கேரக்டருக்கு தேர்வு செய்தார். அவருடனான முதல் சந்திப்பு மும்பையில் இருந்தது. அடுத்த சந்திப்பு சென்னை வடபழனியில் நடந்த ‘காதல் கொண்டேன்’ ஷூட்டிங் ஸ்பாட்டில்தான்.

அதன்பிறகு, திருப்பதி அருகேயுள்ள ‘தலகோனா’ பகுதியில்தான் நிறைய காட்சிகள் எடுக்கப்பட்டன. அடர்ந்த காட்டுப் பகுதியில் இரவுவரை ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கும். அனைவருமே கடுமையாக உழைத்தோம். ரிசல்ட் எதிர்பார்த்தபடியே அமைந்தது. செல்வா சார் எப்பவுமே சீரியஸ். தனுஷ் சார் அப்படியே ஆப்போசிட். கொஞ்சம் அமைதி. ஷூட்டிங் இடைவேளைகளில் தனுஷ் சார் என்னுடன் வந்து கிரிக்கெட் விளையாடியதையெல்லாம் மறக்கவே முடியாது. அவர்தான், படத்தின் ஹீரோ. படத்தின் வெற்றிக்கு தனுஷ் சாரின் நடிப்பும் யுவன் ஷங்கர் ராஜா சாரின் மயக்கும் இசையும்தான் முக்கிய காரணம். முதல் படமே இவர்களுடன் அமைந்ததை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

காதல் கொண்டேன் படத்தில் சுதீப் சாரங்கி

எனக்கு பெயர், புகழ், பணம் எல்லாம் கிடைத்தது இந்த ஒரு படத்தால்தான். இப்போதும், ஆதியை மக்கள் நினைப்பதற்கு செல்வராகவன் சார்தான் காரணம். என்மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த செல்வராகவன் மீது மிகப்பெரிய அன்பும் மரியாதையும் வைத்துள்ளேன். 2002-ஆம் ஆண்டிலிருந்து 2005-ஆம் ஆண்டுவரை சென்னையில்தான் இருந்தேன். ‘காதல் கொண்டேன்’ படத்திற்குப்பிறகு இரண்டு தமிழ் படங்களில் நடித்தேன். ஆனால், எல்லாம் ஒரேமாதிரியான கேரக்டர்கள்தான். அதற்குப்பிறகு, சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

‘காதல் கொண்டேன்’ படத்தில் நடிக்கும்போது எனது வயது 22 தான். அப்போது, திரைத்துறையில் எந்தவொரு சப்போர்ட்டும் கிடையாது. சரியான வழிகாட்டியும் இல்லை. ஒருவேளை, அப்போது சோஷியல் மீடியாக்கள் இருந்திருந்தால் நான் நிச்சயம் தமிழ் சினிமாவில் நல்ல இடத்தைப் பிடித்திருப்பேன்” என்பவரிடம் “இப்போதும் நீங்கள் தமிழ் சினிமாவில் நடிக்கலாமே?” என்று கேட்டேன்.

சுதீப் சாரங்கி

“எனக்கு தமிழ் சினிமாவில் நடிக்கவேண்டும் என்பதுதான் ஆசை. தமிழ் சினிமாவை ரொம்ப நேசிக்கிறேன். அதனால்தான், கடந்த 2007, 2010, 2012 – ஆம் ஆண்டுகளில் சென்னைக்கு வாய்ப்புத்தேடி வந்தேன். எவ்வளவோ ட்ரை பண்ணினேன். ஆனால், தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது, ஒரேயொரு தமிழ் படத்திலாவது நடிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதற்காக, கடவுளிடமும் வேண்டிவருகிறேன். நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால்தான், மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டேன். தற்போது, இந்தி படங்கள், சீரியல், வெப் சீரிஸ், விளம்பரப் படங்கள் என நடித்துக்கொண்டிருக்கிறேன். ஆனாலும், எனது விருப்பம் தமிழ்தான்” என்று உருக்கமாக பேசுபவரிடம் “செல்வராகவனுடன் தொடர்பில் இருக்கிறீர்களா?” என்று கேட்டேன்.

“செல்வா சாரின் போன் நம்பர் என்னிடம் இல்லை. இப்போது, செல்வா சார் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராகிவிட்டார். தனுஷ் சார் ஹாலிவுட்டிலும் கலக்கிக்கொண்டிருக்கிறார். இருவருமே பெரிய இடத்தில் இருப்பதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவர்களிடம் பேசவேண்டும் என்றுதான் விரும்புகிறேன். எப்போது நடக்கும் என்று தெரியவில்லை” என்று தனது விருப்பத்தைத் தெரிவிக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.