புதுடெல்லி: டெல்லியில் வைஷாலி காலனியில் குழந்தைகள் நல மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத் துறையினர் 20 பச்சிளங் குழந்தைகளைப் பத்திரமாக மீட்டனர்.
இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது: டெல்லி வைஷாலி காலனியில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது. தகவல் வந்தவுடன் 9 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு 20 பச்சிளங் குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டனர்.
இவர்களில் 13 குழந்தைகள் ஜனகாபுரி ஆர்யா மருத்துவமனைக்கும், இருவர் துவாரகா மோர் பச்சிளங் குழந்தைகள் மருத்துவமனைக்கும், இரண்டு குழந்தைகள் ஜேகே மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டன. 3 குழந்தைகள் மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. தீ விபத்திற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இவ்வாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.