சான் பிரான்சிஸ்கோ: இனி ட்விட்டர் பயனர்கள் தாங்கள் பதிவிட்ட ட்வீட்களை எடிட் செய்வதற்கு 1 மணி நேரம் வரை கால அவகாசம் கிடைக்கும் என ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் ட்வீட்களை திருத்தி எழுதலாம். இதற்கு முன்னர் பதிவு செய்த ட்வீட்களை திருத்த பயனர்களுக்கு 30 நிமிடங்கள் வரை கால அவகாசம் இருந்தது.
ஆனால் ட்வீட் நீக்கம் செய்யும் அம்சத்தை ட்விட்டர் ப்ளூ சப்ஸ்கிரைபர்கள் மட்டுமே பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பயனர்கள் பதிவு செய்த ட்வீட்களை திருத்த உதவும் ட்வீட் எடிட் அம்சத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நேர மாற்றம் குறித்து ட்விட்டர் அறிவித்துள்ளது. இந்த அம்சத்தைப் பெற்றுள்ள பயனர்கள் அதிகபட்சமாக 5 முறை வரை ட்வீட்களை எடிட் செய்யலாம். ஆனால், எடிட் செய்யப்பட்ட ட்வீட் என்பது இதில் தெரிவிக்கப்படும்.
கடந்த மார்ச் மாதம் உலகம் முழுவதும் உள்ள ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்களுக்கு எடிட் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் நிறுவனம் மஸ்க் வசமானது முதல் அந்த தளத்தில் பல்வேறு மாற்றங்களை அவர் விருப்பத்திற்கு ஏற்ப மேற்கொண்டு வருகிறார். அதில் ஒன்றுதான் வணிக நோக்கில் ப்ளூ டிக் பெற்ற பயனர் கணக்குகளிடம் இருந்து சந்தா வசூலிப்பது. அதன்படி ட்விட்டர் தளத்தில் யார் வேண்டுமானாலும் சந்தா செலுத்தி அங்கீகரிக்கப்பட்ட கணக்கு என்ற அடையாளத்திற்கான ப்ளூ டிக்கை ‘ப்ளூ சப்ஸ்கிரைபர்’ மூலம் பெறலாம் என அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் பயனர்கள் விளம்பர இம்சைகள் இல்லாமல் ட்விட்டர் தளத்தை பயன்படுத்த முடியும். மேலும், ட்விட்டரில் அறிமுகமாகும் புதிய அம்சங்களை முன்கூட்டியே பயன்படுத்த முடியும் எனவும் தகவல். 10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்யவும் முடியும். இதைப் பெற பயனர்கள் சந்தா கட்டணம் செலுத்த வேண்டும். வலைதள பயன்பாட்டுக்கு ரூ.650 மற்றும் மொபைல் போன் பயன்பாட்டுக்கு ரூ.900 என இதன் மாதாந்திர சந்தா நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Blue subscribers now have up to 1 hour to edit their Tweets.