மேட்டூர்: திமுக ஆட்சியில் மின் கட்டணம் 52 சதவீதம் உயர்ந்துள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கல்லபாளையம் பிரிவு சாலையில் எடப்பாடி நகர கழகம் சார்பில் அமைக்கப்பட்ட அதிமுக கொடியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஏற்றி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “தமிழகத்தில் 10 ஆண்டு காலம் அதிமுக அரசு பொற்கால ஆட்சி தந்தது. கடந்த 2 ஆண்டுகளில் திமுக அரசில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது. திமுக ஆட்சியில் மின் கட்டணம் 52 சதவீதம் உயர்ந்துள்ளது. மாதந்தோறும் மின்சாரம் கணக்கீடு செய்யப்படும் என வாக்குறுதி அளித்து விட்டு, ஆட்சிக்கு பிறகு திமுக நிறைவேற்றவில்லை. மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தினால் குறைவு தான். வீட்டு வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் குப்பைக்குகூட வரி போடுகிறார்கள். இதுவரை வீதியில் நடப்பதற்கு மட்டுமே வரி போடவில்லை. விரைவில் அதற்கும் வரி போட்டு விடுவார்கள்.
இத்தனை வரி போட்டு விட்டு, 30 ஆயிரம் கோடி கொள்ளையடித்துள்ளனர். இதை நாங்கள் சொல்லவில்லை. திமுக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தான் சொல்லியுள்ளார். தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் கோடியை செலவிட்டால் ஏராளமான திட்டங்களை செயல்படுத்த முடியும். 2 ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி கொள்ளையடித்தது தான் திமுக சாதனை. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை திறந்து வைக்க முதல்வர் ஸ்டாலின் சேலம் வருகிறார். நாங்கள் பெற்ற குழந்தைக்கு அவர் பெயர் வைக்கிறார்.
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் காலம் தாழ்த்தி திமுக கொண்டு வந்தது போல் திறக்கின்றனர். அம்மா உணவகத்திற்கு நிதி குறைப்பு, தரமில்லாத உணவு, ஊழியர்கள் குறைப்பு போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டத்தை முடக்குவதோடு, திட்டங்களை பெயர் மாற்றி செயல்படுத்தி வருகின்றனர். மக்களுடைய வரி பணத்தை நல்ல திட்டங்களுக்காக நிதியாக ஒதுக்குவதில்லை.
முதலமைச்சராக இருந்தவருக்கு நினைவு சின்னம் வைக்க நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நினைவிடத்தில் வைக்காமல் கடலில் கொண்டு போய் வைப்பதைத்தான் எதிர்க்கிறோம். அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த 100 ஏரிகள் திட்டத்தை முடக்கி விட்டார்கள். ஏழை மக்கள் நிரந்தரமாக விவசாயம் செய்ய ரூ.565 கோடியில் நான் இருக்கும்போதே அத்திட்டத்தை தொடங்கி வைத்துவிட்டேன். ஆனால், ஆட்சி மாற்றத்துக்கு பிறகு அப்படியே நிறுத்திவிட்டார்கள். நிலம் கையகப்படுத்துவது கூட நடைபெறவில்லை.
கிராமத்தில் இருந்து நகரம் வரை அனைத்து ஏரியாவும், அதன் பிரச்னைகளும் எனக்கு தெரியும். மக்களோடு மக்களாக இருந்து நான் செயல்பட்டேன். என்ன பிரச்சனை உள்ளது. எப்படி சமாளிப்பது, மக்களுக்கு என்ன செய்தால் நன்மை கிடைக்கும் எனத் தெரியாத பொம்மை முதல்வராக இருக்கிறார் ஸ்டாலின். 234 தொகுதியிலும் மக்களின் தேவையறிந்து செயல்பட்டது அதிமுக அரசுதான். தமிழகத்தில் 6 ஆயிரம் மதுக்கடைகள், 5,800 பார்கள் செயல்படுகிறது. இதில் 4 ஆயிரம் பார்கள் முறைகேடாக நடந்துள்ளது. 2 ஆண்டுகளில் 20 ஆயிரம் கோடி கொள்ளையடித்துள்ளனர். தமிழகத்தில் 24 மணி நேரமும் மது விற்பனை நடந்து வருகிறது.
நிழலின் அருமை வெயிலில் தான் தெரியம் என்பது போல் அதிமுக ஆட்சியின் அருமையை மக்கள் உணர்ந்துள்ளனர். காவல்துறை கொள்கைவிளக்க குறிப்பில் பள்ளி, கல்லுரி அருகில் 2,110 பேர் கஞ்சா விற்பனை செய்ததாக கண்டறியப்பட்டது. ஆனால், 144 பேர் மட்டுமே கைது செய்துள்ளனர். தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக காட்சியளிக்கிறது. தமிழகத்தில் விலைவாசி உயர்ந்துவிட்டது. அதை கட்டுப்படுத்த திமுக தவறிவிட்டது. முதல்வர் பதவி ஸ்டாலின் குடும்பத்திற்கு பட்டா போட்டு கொடுக்கப்பட்டதா? யார் வேண்டுமானலும் முதல்வர் ஆகலாம்” இவ்வாறு அவர் பேசினார்.