கொல்கத்தா: நிலக்கரி ஊழல் வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிராவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
ருஜிரா கடந்த திங்கட்கிழமை தனது 2 குழந்தைகளுடன் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல முயன்றபோது கொல்கத்தா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அப்போது அவரிடம் நிலக்கரி ஊழல் வழக்கில் ஜூன் 11-ம் தேதி விசாரணைக்கு வருமாறு அமலாக்கத் துறை சார்பில் நோட்டீஸ் தரப்பட்டது.
இந்நிலையில் ருஜிரா நேற்று மதியம் 12.40 மணிக்கு தனது வழக்கறிஞருடன் கொல்கத்தா சிஜிஓ வளாகத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தை அடைந்தார்.
அவரிடம் டெல்லியில் இருந்துவந்த ஒருவர் உட்பட 5 அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ருஜிராவுக்காக 3 பக்க கேள்விகளை அதிகாரிகள் தயாரித்து வைத்திருந்தாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யும் அக்கட்சியின் மூத்த தலைவருமான அபிஷேக் பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் மருமகன் ஆவார். மேற்கு வங்கத்தில் ‘ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ்’ நிறுவனத்தின் கைவிடப்பட்ட நிலக்கரி சுரங்கங்களில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரியை சட்டவிரோதமாக வெட்டி எடுத்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இவ்வழக்கில் ஊழல் தொகை ஹவாலா வழியில் பரிமாற்றம் செய்யப்பட்டதாக சிபிஐ கூறுகிறது.இது தொடர்பாக அமலாக்கத் துறைவிசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் ருஜிராவிடம் சிபிஐ மற்றும்அமலாகத் துறையினர் இதற்கு முன்னரும் விசாரித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாமல் தன்னை முடக்கவே இந்த விசாரணை நடைபெறுவதாக அபிஷேக் பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என திரிணமூல் காங்கிரஸ் கூறியுள்ளது. இதனை மாநில பாஜக மறுத்துள்ளது.