சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே, நீச்சல் குளத்தில் பெற்றோருடன் குளிக்கச் சென்ற 6 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், உரிமையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, நீச்சல் குளத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஆகச்சிறந்த உடற்பயிற்சிகளில் ஒன்றாக திகழும் நீச்சலை கற்றுக்கொள்ளும் ஆசையால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த 6 வயது சிறுவன் சஸ்வின் வைபவ் இவர் தான்…..
சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார், இவரது மனைவி தாரிகா. கோடை விடுமுறையையொட்டி தாரிகா தனது இரு மகன்களுடன் நீலமங்கலத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். தாத்தா-பாட்டி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளில், மூத்தவரான, 6 வயது சஸ்வின் வைபவ், நீச்சல் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டதால், நீலமங்கலத்தில் உள்ள NLS Sports Academy என்ற தனியார் நீச்சல் பயிற்சி மையத்தில் சேர்த்துவிட சென்றுள்ளனர்
காசு கொடுத்தால் நீச்சல் குளத்தில் நீராடலாம் என்பதால், சிறுவனின் பெற்றோர், குடும்ப சகிதமாக, வியாக்கிழமையன்று காலையில், அங்கு சென்று குளித்துள்ளனர். ஆழம் குறைவான பகுதியில் சிறார்களும், ஆழமுள்ள பகுதியில் பெரியவர்களும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, பெரியவர்கள் சிலர் மேலிருந்து குதித்ததால், நீச்சல் குளம் ததும்பி உருவான அலையில், சிறுவன் சஸ்வின் வைபவ், ஆழமான பகுதிக்கு, இழுத்துச் செல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது.
பெற்றோர்களோ, நீச்சல் குள ஊழியர்களோ கவனிக்க தவறியதால், தண்ணீரில் மூழ்கிய சிறுவனை உடனடியாக காப்பாற்றவோ, அவர்களுக்கு போதிய அனுபவம் இல்லாததால், முதலுதவி சிகிச்சை அளிக்கவும் முடியவில்லை என்றும் கூறப்படுகின்றது. இதனால், Golden Hour எனப்படும் உயிர்காக்கும் தருணத்தை கடந்துவிட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி சிறுவன் சஸ்வின் வைபவ் பரிதாபமாக உயிரிழந்தான்.
சிறுவனின் உயிரிழப்பைத் தொடர்ந்து, அங்கு ஆய்வு நடத்திய வருவாய்த்துறை அதிகாரிகள் நீச்சல் குளம் அனுமதியின்றி செயல்பட்டதை கண்டுபிடித்தனர். அதன் மின்சாரத்தை துண்டித்ததோடு நீச்சல் குளத்திற்கு சீல் வைத்தனர். அஜாக்கிரதையாக செயல்பட்டது, எவ்வித பாதுகாப்பு உபகரணம் இன்றி உயிரிழப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மணிமங்கலம் போலீசார், NLS Sports Academy என்ற பெயரில் லைசென்ஸ் இல்லாமல் செயல்பட்ட நீச்சல் குளத்தின் உரிமையாளர்கள் பிரபு, நாகராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
நீச்சல் குளத்தில் கட்டாயம் இருக்க வேண்டிய, லைஃப் ஜாக்கெட், காற்று நிரப்பப்பட்ட டியூப், சிறார்களின் கைகளில் மாட்டிவிடப்படும், நீளமான பலூன் போன்ற வடிவிலான ஸ்பெஷல் டியூப் உள்ளிட்டவை இல்லை என்றும் நான்கு மாதங்களுக்கு முன்னர் தான் நீச்சல் குளம் செயல்படத் தொடங்கியதாக கூறப்பட்டாலும் நுழைவு கட்டண அறிவிப்புடன் விளம்பரம் வெளியிட்ட போது வருவாய்த்துறை அதிகாரிகள் கவனிக்காதது ஏன் ? என்று கேள்வி எழுகிறது.
அதே நேரத்தில் இது போன்ற நீச்சல் குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் குடும்பத்துடன் குளிப்போர் தங்கள் வீட்டு குழந்தைகள் மீது தனிக்கவனம் செலுத்த தவறினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம்.