இடுக்கி: கேரளா, தமிழ்நாட்டில் அதகளப்படுத்திய அரி கொம்பன் யானையை தேடி கேரளா தேசிய நெடுஞ்சாலையை சக்க கொம்பன் யானை மறித்து நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரளா வனப்பகுதியில் அரிகொம்பன் யானை மூர்க்கமாக 10 பேரை மிதித்து கொன்றது. இந்த யானையை பிடித்த கேரளா வனத்துறையினர் தேக்கடி வனப்பகுதிக்குள் விட்டனர். ஆனால் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்குள் நுழைந்தது அரி கொம்பன்.
தமிழ்நாட்டின் கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் நகரங்களுக்குள் வீதி உலா நடத்தியது அரிகொம்பன். இதனால் கம்பம் நகரில் 144 தடை உத்தரவே பிறப்பிக்க வேண்டியிருந்தது. தமிழ்நாட்டில் ஒருவாரம் போக்கு காட்டிய அரிகொம்பன் ஒருவழியாக மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு கோதையாறு அணைக்கு மேல் அகத்தியமலை யானைகள் காப்பகமான முத்துக்குழி வயல் பகுதியில் கொண்டு போய்விடப்பட்டது. தற்போது அங்கு சாதுவான நிலையில் அரி கொம்பன் யானை வலம் வந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகின.
அதேநேரத்தில் அரிகொம்பன் யானை, கேரளாவின் மூணாறு சின்னக்கானல் பகுதியை சேர்ந்தது; அதன் பூர்வீக இடத்தில்தான் அரிகொம்பனை கொண்டு வந்துவிட வேண்டும் என அப்பகுதி பழங்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த பாசப் போராடத்தில் இப்போது அரி கொம்பன் யானையின் நண்பன் சக்க கொம்பன் இணைந்துள்ளது. கேரளாவின் கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஆனையிரங்கள் பகுதியில் சக்க கொம்பன் வலம் வந்தது. தேசிய நெடுஞ்சாலையை மறித்து அப்பகுதியிலேயே முகாமிட்டிருந்தது சக்க கொம்பன். அத்துடன் சில குடியிருப்புகளையும் சக்க கொம்பன் சிதைத்தது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், பலாப்பழத்தை தேடி அவ்வப்போது சக்க கொம்பன் இப்பகுதிக்கு வருகை தருவது வழக்கம் என்கின்றனர்.
ஆனால் சின்னக்கானல் பகுதி பழங்குடிகளோ, அரி கொம்பனும் சக்க கொம்பனும் நண்பர்கள். அரி கொம்பன் இடம்பெயர்ந்தது முதலே தேடுதல் படத்தில் சக்க கொம்பனும் உள்ளது. கடந்த மாதம் கூட இதேபோல தேசிய நெடுஞ்சாலையை சக்க கொம்பன் மறித்து நின்றது. ஆகையால்தான் அரி கொம்பனை சின்னக்கானல் வனப்பகுதியில் கொண்டு வந்துவிட வேண்டும் என்கின்றனர்.