பாரீஸ்,
‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், 2-ம் நிலை வீராங்கனையுமான அரினா சபலென்கா (பெலாரஸ்), தரவரிசையில் 43-வது இடம் வகிக்கும் கரோலினா முச்சோவாவுடன் (செக்குடியரசு) மோதினார்.
முதல் செட்டை டைபிரேக்கர் வரை போராடி முச்சோவாவும், 2-வது செட்டை அதே போன்று டைபிரேக்கரில் சபலென்காவும் வசப்படுத்தினர். 3-வது செட்டில் ஒரு கட்டத்தில் 2-5 என்ற கணக்கில் முச்சோவா பின்தங்கினார். அப்போது எதிராளியின் மேட்ச் பாயிண்ட் ஆபத்தில் இருந்து தன்னை தற்காத்துக் கொண்ட முச்சோவா தொடர்ந்து 5 கேம்களை வென்று சபலென்காவுக்கு அதிர்ச்சி அளித்தார். பந்தை வலுவாக வெளியே அடித்துவிடும் தவறுகளை சபலென்கா அதிகமாக செய்தது அவருக்கு பின்னடைவாகிப் போனது.
3 மணி 13 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் 26 வயதான முச்சோவா 7-6 (7-5), 6-7 (5-7), 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கிராண்ட்ஸ்லாமில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார். நாளை நடக்கும் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் ஸ்வியாடெக் (போலந்து) அல்லது ஹாடட் மையா (பிரேசில்) ஆகியோரில் ஒருவரை முச்சோவா சந்திப்பார்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டத்தில் 4-ம் நிலை வீரர் கேஸ்பர் ரூட் (நார்வே) 6-1, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஹோல்ஜர் ருனேவை (டென்மார்க்) வெளியேற்றி 2-வது ஆண்டாக அரைஇறுதியை எட்டினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடக்கும் அரைஇறுதி ஆட்டங்களில் நோவக் ஜோகோவிச் (செர்பியா)- கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), கேஸ்பர் ரூட் (நார்வே)- அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.