கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் வீரணம்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கோவிலில் சாமி கும்பிடும் பொழுது அவருக்கு விபூதி தர மறுத்து உள்ளே நுழைய விடக்கூடாது என ஒரு தரப்பினர் தடுத்து நிறுத்தி வெளியே அனுப்பி உள்ளனர்.
இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதை அடுத்து வட்டாட்சியர் முனிராஜ் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் கெடா வெட்டு நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று கோவில் பூட்டை திறந்து உள்ளே இருந்த கரகங்களை எடுத்து நீர் நிலையில் விட்டனர். இதை தங்களுக்கு கிடைத்த வெற்றி என ஒரு தரப்பினர் வாட்ஸ் அப் குழுக்களில் பகிர, இத பட்டியல் இனத்தவரை ஆத்திரமூட்டியது. இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி சம்பவ இடத்திற்கு விரைந்து சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
இதில் உடன்பாடை வெட்டப்படாததால் கோட்டாட்சியர் புஷ்பா தேவி தலைமையிலான வருவாய்த்துறையினர் கோவிலுக்கு சீல் வைத்தனர். இதனால் வருவாய்த் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கோட்டாட்சியரின் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று விழுப்புரம் மாவட்டம் மேல்பாதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைத்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தமிழகத்தின் மேலும் ஒரு கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.