போர் தொழில் விமர்சனம்: சீரியல் கில்லரைத் தேடும் இருவர்; க்ரைம் த்ரில்லர் ஜானரில் மிரட்டுகிறதா படம்?

பெண்களைத் தொடர்ந்து கொலை செய்யும் சீரியல் கில்லர் ஒருவனைத் தேடும் இரண்டு காவல் அதிகாரிகள் சந்திக்கும் சவால்களே இந்த `போர் தொழில்’.

திருச்சி நெடுஞ்சாலையில் இருக்கும் காட்டில் ஒரு பெண் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறாள். விசாரணையில் இதற்கு முன்னரும் இதேபோல வேறொரு பெண் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டறிகிறது காவல்துறை. எவ்வித தடயமும் இல்லாமல் ஒரே மாதிரியாக அடுத்தடுத்து பெண்களைக் குறிவைத்தே கொலைகள் நடைபெற, ‘தொடர் கொலைகாரன்’ (சீரியல் கில்லர்) ஒருவன்தான் இதனைச் செய்கிறான் என விசாரணையில் இறங்குகிறது உள்ளூர் போலீஸ். விசாரணையில் அவர்கள் திணற, வழக்கு சிறப்பு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு எஸ்.பி லோகநாதனிடம் (சரத்குமாரிடம்) வழக்கு விசாரணை ஒப்படைக்கப்படுகிறது. புதிதாக டி.எஸ்.பி போஸ்டிங் பெற்ற பிரகாஷ் (அசோக் செல்வன்) அவரிடம் பயிற்சி பெறுவதற்காக இணைய, இந்தப் புலனாய்வுக் கூட்டணி நெஞ்சை உரைய வைக்கும் சீரியல் கில்லரின் கொலைவெறிச் செயல்களைத் தடுக்கிறதா, கொலைகாரன் உண்மையில் யார், ஏன் இந்தக் கொலைகள் நடக்கின்றன என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லராகச் சொல்கிறது ‘போர் தொழில்’.

போர் தொழில்: அசோக் செல்வன்

சாக்லேட் பாய் லுக்கில் பயந்த சுபாவம், தயக்கம், தடுமாற்றம் என ஓர் இளம் காவல்துறை அதிகாரியாக அசோக் செல்வன். எல்லோரும் பேசிக் கொள்ளும் இடத்தில் தானும் ஏதாவது பேசி தன் அறிவை நிரூபிக்க நினைப்பது, எடுத்த எடுப்பிலேயே ஒரு பெரிய வழக்கினைச் சுமப்பதால் அதற்கான அனுபவமில்லாத தன்மையை வெளிக்காட்டி திணறுவது என ஹீரோயிஸ பூச்சு இல்லாத யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார். முதல் பெஞ்சு மாணவன் போலப் புத்தக அறிவை வைத்துப் பேசும் காட்சிகளிலும் ஆழமாக ஸ்கோர் செய்திருக்கிறார்.

உயர் அதிகாரியாக முகத்தில் சிரிப்பே இல்லாத கரடுமுரடான கதாபாத்திரத்தில் சரத்குமார். அசோக் செல்வனிடம் நடந்து கொள்ளும் கறாரான விதம், புலனாய்வில் காட்டும் சாதுரியம் எனத் தன் பாத்திரத்தைச் சிறப்பாக உள்வாங்கி நடித்துள்ளார். அதே சமயம், கதையின் ஓட்டத்தில் மிக நுட்பமான மாறுதலை தன் நடிப்பில் காட்டி ‘இதுதான் என் அனுபவம்’ என அட்டகாசமாக ஸ்கோர் செய்திருக்கிறார்.

போர் தொழில்: சரத்குமார்

இவர்களுக்கு உதவியாக வரும் நிகிலா விமல் வழக்கமான த்ரில்லர் படங்களில் கதாநாயகிக்கு இருக்கும் அதே பங்களிப்பைச் செய்திருக்கிறார். ஜீப் டிரைவராக நடித்துள்ள தயாரிப்பாளர் தேனப்பன் சில காட்சிகளே வந்தாலும் நன்றாக நடித்திருக்கிறார். இவர்கள் தவிர மறைந்த நடிகர் சரத்பாபுவும் கதையின் ஓட்டத்தில் கவனம் பெறுகிறார்.

ஆரம்பக் காட்சியிலிருந்தே தொடங்கும் அந்தக் கணிக்க முடியாத காட்சியமைப்பும், பரபரப்பான திரைக்கதையும் சுவாரஸ்யமான பார்ட்னர்ஷிப்பை போட்டுக் கொண்டு முதல் பாதி முழுக்கவே நம்மை இருக்கையின் நுனியிலேயே அமர வைத்திருக்கின்றன.

முதல் பாதியிலேயே முடிச்சுகளை அவிழ்த்துவிட்டதால் (?) இரண்டாம் பாதியில் திரைக்கதை சற்றே தொய்வைச் சந்திக்கிறது. இருப்பினும் வெறுமனே பார்வையாளர்களைப் பயமுறுத்துவதை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளாமல் குற்றத்தையும், குற்றத்துக்கு முந்தைய குற்றவாளியின் மனநிலையையும் ஆராய்கிற விதத்தில் ஆல்ஃபிரட் பிரகாஷ் – விக்னேஷ் ராஜா கூட்டணியின் பொறுப்புள்ள எழுத்து பாராட்டுக்குரியது.

போர் தொழில்:
சரத்குமார், அசோக் செல்வன்

காட்சியின் தன்மையைப் பிரதிபலித்து, வில்லன் யாரென்று தெரிவதற்கு முன்பே வில்லனாக அலற வைத்திருக்கிறது ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசை. இசை தேவையில்லையென நிசப்தமாக அவர்விட்ட இடங்களும் காட்சியின் அழுத்தத்தை மேலும் கூட்டி இருக்கின்றன. திடீர் திடீரென வரும் சச்சின் சுதாகரன், ஹரிஹரனின் சவுண்ட் எஃபெக்ட்ஸ் பதற்றமடையச் செய்கிறது. கதையின் சூழல் தெளிவாக மனதில் பதியும் வகையில் கதையோடு ஒன்ற வைத்திருக்கும் கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவு சிறப்பு. ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு திரைக்கதையின் வேகத்தைக் கூட்டியிருக்கிறது என்றாலும் பிளாஷ்-பேக் காட்சிகளில் இன்னும் கத்திரி போட்டிருக்கலாம்.

கோரமான கொலைக் காட்சிகளைத் தத்ரூபமாகக் கண்ணில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது அப்துல் ரசாக்கின் பிராஸ்தெடிக் மேக்-அப். குறைவாகவே வரும் சண்டைக் காட்சிகளை பீனிக்ஸ் பிரபு இன்னுமே சிரத்தையுடன் கையாண்டிருக்கலாம்.  

போர் தொழில்:
சரத்குமார், அசோக் செல்வன்

“பயப்படுறவன் கோழை இல்ல, பயந்து ஓடுறவன்தான் கோழை”, “நீங்க உங்க வேலையைச் சரியா செஞ்சா எங்க வேலை குறையும்” போன்ற வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. இவை தவிர பல இடங்களில் சரத்குமார் தரும் ஒன் லைன் ‘Thug life’ பதில்கள் அப்ளாஸ் அள்ளுகின்றன. வித்தியாசமாகக் காட்டுகிறேன் என்ற பெயரில் யாரை வேண்டுமானாலும் வில்லனாகக் காட்டலாம் என்று பொறுப்பற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட வழக்கமான சீரியல் கில்லர் கதாபாத்திரங்கள் இதில் இல்லாமல் இருப்பது கூடுதல் ஆறுதல். இருப்பினும் வழக்கமாகவே சீரியல் கில்லர்களுக்கு என்று வைக்கப்படும் சம்பிரதாய ‘பிளாஷ்பேக்’ காட்சியிலிருந்து இந்தப் படமும் தப்பவில்லை. இது இரண்டாம் பாதியில் படத்தின் சிறப்பான த்ரில்லர் அனுபவத்தைச் சற்றே கெடுத்துவிடுகிறது.

இருப்பினும் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா, சீரியல் கில்லர்களை நியாயப்படுத்தாமல் குற்றத்திற்கு ஒருவகையில் காரணமாக இருக்கும் சமூகப் பிரச்னைகள் குறித்து ஒரு பக்குவமான ஆரோக்கியமான உரையாடலை முன்வைத்திருப்பது பாராட்டுக்குரியது. அதைத் தன் இரண்டு பிரதான பாத்திரங்கள் வழியேவும் பேசியிருப்பது புத்திசாலித்தனமான காட்சியமைப்பு.

போர் தொழில்

மொத்தத்தில் இரண்டாம் பாதியின் திரைக்கதையிலும், பிளாஷ் பேக் காட்சிகளின் உண்மைத் தன்மையிலும் கூடுதல் கவனம் செலுத்தாதது மட்டுமே குறை. மற்றபடி, தமிழில் க்ரைம் திரில்லர் ஜானரில் தவிர்க்க முடியாத ஒரு படமாகிறது இந்தப் ‘போர் தொழில்’.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.