மதுரை:
திருமண ஃபோட்டோஷூட் எடுக்க எங்கே போகலாம் என தலையை பிய்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இனி வேண்டாம். மதுரை ரயில் நிலையத்தில் உள்ள ரயில்களில் ஏறி தாராளமாக ஃபோட்டோஷூட் நடத்திக் கொள்ளுங்கள் என மதுரை ரயில்வே கோட்டம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சமீபகாலமாக திருமண நிகழ்ச்சிகளில் சாப்பாடு போடுகிறார்களோ இல்லையோ சில விஷயங்களை செய்தே ஆக வேண்டும் என்ற நிலைமை வந்துவிட்டது. மணமகள் அழைப்பின் போது மணமகளும், தோழியரும் டான்ஸ் ஆடிக்கொண்டே வர வேண்டும்; மேடை ஏறிய பின்னர் மணமகனும், மணமகளும் குத்தாட்டம் போட வேண்டும்; இதையெல்லாம் செய்த பின்னர் எப்படி அழுகை வரும்.. அப்படியெல்லாம் கேட்கக்கூடாது. மணப்பெண் தன் பெற்றோரை பார்த்ததும் மேக்கப் கலையாமல் கண்ணீர் விட வேண்டும்.
இத்தனை சடங்குகள் முடிந்த பிறகுதான் முக்கியமான விஷயமே வருகிறது. அதுதான் ஃபோட்டோஷூட். வித்தியாச வித்தியாசமாக எடுக்கிறோம் என்ற பெயரில் சிலரின் ஃபோட்டோஷூட் படு காமெடியாக இருக்கும். சில சமயங்களில் கடல், ஆறு என மணமக்களை இறக்கிவிட்டு ஆபத்தில் சிக்க வைத்த ஃபோட்டோகிராஃபர்களும் உண்டு.
இந்நிலையில்தான், இளம் தம்பதியர் இப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்பதற்காக மதுரை ரயில்வே கோட்டம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருமணத்துக்கு ஃபோட்டோஷூட் எடுக்க மதுரை ரயில் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மதுரை ரயில் நிலையம், அங்கு நிற்கும் ரயில்கள் என அனைத்து இடங்களிலும் ஃபோட்டோஷூட் நடத்திக் கொள்ளலாம். இதற்கு கட்டணமாக ரூ.5000-ஐ மதுரை ரயில்வே கோட்டம் நிர்ணயித்துள்ளது. பிற ரயில் நிலையங்களில் ஃபோட்டோஷூட் நடத்த ரூ.3000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்னும் என்ன தாமதம்.. ம்ம்.. கிளம்புங்கள்.