நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் `ஜெயிலர்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘ஜெய் பீம்’ படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நிலையில், இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் – நடிகைகள் யார் என்பதைப் பற்றியான தகவல்களும் சுற்றிக்கொண்டே இருக்கின்றன.
படத்தின் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திற்காக சூர்யாவைக் கேட்கலாம் எனச் சொல்லப்பட்டதற்கு ரஜினி மறுத்துவிட்டார் என்று தகவல் வந்தது. இது முற்றிலும் தவறான தகவலாம். சூர்யாவை இந்தப் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்கிற முயற்சிக்கே யாரும் செல்லவில்லையாம்.
அதேபோல், விக்ரமிடம் கேட்கப்பட்டு அவரின் கால்ஷீட் இல்லை என்று சொன்னதாகவும் தகவல் வந்தது. இதுவும் எந்த அளவிற்கு உண்மை என்பது சந்தேகமாகவே இருக்கிறது. சூர்யா, விக்ரம் என்று சொல்லப்பட்ட அந்த முக்கியமான கேரக்டரில் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கிறாராம்.
இந்தப் படத்தில் ரஜினிக்கு இணையான ஒரு முக்கியமான கதாபாத்திரம் அது. இந்தக் கதாபாத்திரத்திற்காக அமிதாப் பச்சனிடம் கேட்கலாம் என்று ரஜினியிடம் சொல்லும்போதே மிகவும் சந்தோஷப்பட்டாராம் ரஜினி. இதைத் தொடர்ந்து மும்பை சென்று அமிதாப்பிடம் கதை சொல்லப்பட்டது. அவரும் மகிழ்ச்சியுடன் இந்தப் படத்தில் நடிக்கச் சம்மதித்திருப்பதாகத் தகவல்.
இந்தியில் 1991-ம் ஆண்டு வெளியான ‘ஹும்’ (HUM) படத்திற்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கும் படம் இதுதான். அதுமட்டுமில்லாமல் அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் நேரடித் தமிழ்ப் படமும் இதுதான். 32 ஆண்டுகளுக்குப் பிறகு தனது நண்பருடன் சேர்ந்து நடிப்பதால் ரஜினிகாந்த் மகிழ்ச்சியாக இருக்கிறாராம். இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிக்கிறார் என்று ஏற்கெனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.