மும்பை/ சான்பிரான்சிஸ்கோ: நடு வானில் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் பயணிகள் மாற்று விமானம் மூலம் அங்கிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை சென்றடைந்தனர்.
பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்தைக் கருதி டிக்கெட் கட்டணத்தை திருப்பித் தர முடிவு செய்துள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 216 பயணிகள் மற்றும் 16 விமான சிப்பந்திகளுடன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் திடீரென இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள மகதானுக்கு அந்த விமானம் அவசரமாக திருப்பிவிடப்பட்டு தரையிறக்கப்பட்டது. இந்த நிலையில், ரஷ்யாவில் சிக்கித் தவித்த பயணிகள் அனைவருக்கும் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் வியாழக்கிழமை பாதுகாப்பாக சான்பிரான்சிஸ்கோ நகரை சென்றடைந்தனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்யப்பட்டன.
டிக்கெட் கட்டணத்தை திருப்பித்தர முடிவு
தொழில்நுட்ப கோளாறால் செவ்வாய்க்கிழமை ரஷ்யாவின் மகதானுக்கு ஏர் இந்தியா விமானம் திருப்பிவிடப்பட்டதால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்காக நிறுவனம் மன்னிப்பு கோருகிறது. மேலும், அனைத்து பயணிகளின் டிக்கெட் கட்டணங்களையும் திருப்பித்தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
டெல்லியிலிருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு கிளம்பிச் சென்ற போயிங் 777-200எல்ஆர் ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜூன் 6-ம் தேதி ரஷ்யாவில் அவசரமாக தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.