தொழிலாளர் நலனைப் பாதுகாத்திடும் வகையில் மத்திய, மாநில அரசு துறைகளில் தொழிலாளர் ஆய்வாளர்கள், நல அதிகாரிகள், உதவி ஆணையர்கள் எனப் பல்வேறு நிலைகளில் அதிகாரிகள் பணியாமத்தப்பட்டுள்ளனர்.
இதே போன்று அமைப்புசார்ந்த தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் வழங்குவதற்காகத் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அதிகாரிகள் உள்ளனர்.
இந்த நிலையில் தாம்பரத்தில் தனியார் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் தொடர்ந்து லஞ்சம் பெற்று வந்ததாக புகார் எழுந்தது. தனக்கு மாத மாதம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என மிரட்டலும் விடுத்துள்ளார். இந்த நிலையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் லஞ்சம் பெறுவது குறித்து சென்னை நகர் சிறப்பு பிரிவு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் பேரில் தனியார் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது தொழிலாளர் உதவி ஆய்வாளரை சென்னை நகர சிறப்பு பிரிவு லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களமாக பிடித்துள்ளனர். அவரை கைது செய்த சிறப்பு பிரிவு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.