மத்தியிலும், மாநிலத்திலும் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்ததும் விசாரணை அமைப்புகளைக் கொண்டு எதிர்க்கட்சி பிரமுகர்கள் மீதான முறைகேடு புகார்களை விசாரிப்பதில் மும்முரம் காட்டுவது `அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா’ சம்பவம்தான். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு நடத்துவது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது போலான விஷயங்கள் அடுத்தடுத்து அரங்கேறின.
கடந்த மே மாதம் தி.மு.க அரசுக்கு எதிராக ஆளுநரிடம் புகார் மனு வழங்கப் பேரணியாகச் சென்ற அதே நாளில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் விஜய பாஸ்கர் மற்றும் கே.பி அன்பழகன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது லஞ்ச ஒழிப்புத் துறை. கடந்த ஆண்டு முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டதும் கவனிக்கத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான புகார்களை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுமதி என அ.தி.மு.க வட்டாரங்கள் மீது விசாரணையை முடுக்கிவிட்டது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை. முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணையையும் வேகப்படுத்தியது.
மறுபக்கம் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் பணியாற்றிய அதிகாரிகள் மீது தனது தன் பார்வையைத் திருப்பி இருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. கடந்த 2018 முதல் 2020-ஆம் ஆண்டு வரை தருமபுரி மாவட்ட ஆட்சியராக இருந்த மலர்விழி ஐ.ஏ.எஸ் வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியிருக்கின்றனர். கிராம ஊராட்சிகள் மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் வழங்கக்கூடிய ரசீது புத்தகங்களை அதிக விலைக்குத் தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கியதாகவும் அதற்குத் தனியார் நிறுவனங்களிடமிருந்து கமிஷன் வாங்கியதாகவும் மலர்விழி மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத் துறை.
அதேபோல் ப்ளீச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி தர்மபுரி மாவட்டத்தின் பிடிஓ-வாக பணிசெய்த கிருஷ்ணன் என்பவருக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது.
விசாரணைக்குள்ளாகப்பட்டுள்ள இரு அரசு அதிகாரிகளும் தருமபுரி மாவட்டத்தில் பணிசெய்தபோது முறைகேடுகள் செய்தாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறார்கள். நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், ”தருமபுரி மாவட்ட அதி.மு.க செயலாளராகவும், மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சராகவும் இருந்தவர் கே.பி அன்பழகன் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் அவர்மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய நிலையில்,
தற்போது தர்மபுரி மாவட்டத்தில் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக லஞ்சம் ஒழிப்புத்துறை பதிவும் செய்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. இந்நிலையில் டார்க்கெட் அரசு அதிகாரிகளா, முன்னாள் அமைச்சரா என்ற கேள்வியே மிஞ்சுகிறது” என்கிறார்கள்.
இது தொடர்பாக தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் சிவ ஜெயராஜுடன் பேசியபோது, ”தர்மபுரி மாவட்ட அதிகாரிகளின் மீது முகாந்திரத்தின் அடிப்படையில்தான் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை. இதில் பழிவாங்கல் நடவடிக்கையோ அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சியோ அறவே கிடையாது. தர்மபுரி முன்னாள் ஆட்சியர் மலர்விழி மீதான புகார் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பதிவானதுதான். முறையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு தகுந்த நடவடிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொள்ளும்” என்கிறார்.