இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது, மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் சிறுமி ஒருவர் அளித்த பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில், போக்சோ உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின்கீழ் டெல்லி காவல்துறை வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறது. அவர் கைதுசெய்யப்பட வேண்டும் என மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 5 மாதங்களாகப் போராட்டம் நடத்தி வந்தனர்.
ஆனாலும், அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த மாதம் 28-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகப் புறப்பட்டனர். இதைத் தடுத்தக் காவல்துறை, அவர்களைக் கைதுசெய்து பின்பு விடுவித்தது. அதைத் தொடர்ந்து வீரர்கள், தங்கள் போட்டிகளில் கலந்துகொண்டு பெற்ற பதக்கங்களை கங்கையில் வீசுவதாக அறிவித்தனர். ஆனால் அது விவசாயிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் பின்னர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மல்யுத்த வீராங்கனைகள் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர், சாக்ஷி மாலிக் போராட்டத்திலிருந்து விலகி ரயில்வே பணிக்கு திரும்பவிருப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால் அதை சாக்ஷி மாலிக் மறுத்து, போராட்டம் தொடர்ந்து நடக்கும் என அறிவித்தார். இந்த நிலையில், பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் புகாரளித்த சிறுமியின் தந்தை, “பிரிஜ் பூஷனை பிடிக்காததால்தான், புகாரளித்தேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையே (WFI) தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, வெறுப்பு பேச்சின் பிரதிபலிப்பாக கோஷங்களை எழுப்பியதாகக் கூறி, மல்யுத்த வீரர்கள்மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடந்த நிலையில், டெல்லி காவல்துறை இது தொடர்பாக நீதிமன்றத்தில் பதிலறிக்கையை சமர்பித்திருக்கிறது.
அதில், “வீராங்கனைகள் தொடர்பாக புகார்தாரர் அளித்த வீடியோ ஆதாரங்களை மதிப்பாய்வு செய்த பின்னர், மல்யுத்த வீரர்கள் வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் எந்த கோஷங்களையும் எழுப்பவில்லை, வெறுப்புணர்வை ஏற்படுத்தும் எந்தக் குற்றத்தையும் அவர்கள் செய்யவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து இந்த மனுமீதான அடுத்தக்கட்ட விசாரணையை ஜூலை 7-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.