புதுடெல்லி: வெளிநாடுகளுக்கு சென்றால் இந்தியாவைப் பற்றி விமர்சிப்பது ராகுலின் பழக்கமாக மாறிவிட்டது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் இந்தியா குறித்து விமர்சனம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த பழக்கம் நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராகுல் காந்தி, இந்தியாவின் ஜனநாயகத் தன்மை குறித்து வெளிப்படையான விமர்சனத்தை முன்வைத்தார். இது ஏற்கத்தக்கதல்ல. உலகம் நம்மை உற்றுநோக்கி கொண்டுள்ளது. நமது வளர்ச்சியின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் தேசிய அரசியலை நாட்டிற்கு வெளியே கொண்டு செல்வது தேச நலனுக்கு எந்த வகையிலும் நன்மை பயக்காது. இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்தார்.
அண்மையில் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ராகுல், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, அவர் இந்திய அரசின் மீது பல்வேறு விவகாரங்களில் விமர்சனங்களை முன்வைத்தார்.
அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய ராகுல், “பிரதமர் நரேந்திர மோடி இந்திய காரை பின்பக்க கண்ணாடியை மட்டும் பார்த்து ஓட்ட முயற்சிக்கிறார். இது, ஒன்றன் பின் ஒன்றாக விபத்து ஏற்படுவதற்கு வழிவகுக்கும்” என்று கூறியிருந்தார்.