இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானும் அவரது மனைவி ஆயிஷா முகர்ஜியும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் இருவரும் விவாகரத்து மற்றும் அவர்களது குழந்தை தொடர்பாக இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் சட்ட நடவடிக்கைகளைத் மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையில் குழந்தை மீது தாய்க்கு மட்டும் தனி உரிமை இல்லை என்றும் குடும்ப நிகழ்ச்சிக்கு ஒன்பது வயது மகனை இந்தியாவுக்கு அழைத்து வர நீதிபதி உத்தரவிட்டார்.
பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி ஹரிஷ் குமார், குழந்தையை இந்தியாவுக்குக் கொண்டுவர ஆட்சேபம் தெரிவித்ததற்காக ஆயிஷா முகர்ஜியை கண்டித்தார். ஆகஸ்ட் 2020 முதல் தவானின் குடும்பத்தினர் குழந்தையைப் பார்க்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
முதலில் ஜூன் 17ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த குடும்பச் சந்திப்பு, குழந்தையின் பள்ளி விடுமுறையைக் கருத்தில் கொண்டு ஜூலை 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இருப்பினும், ஆயிஷா மீண்டும் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 2020 முதல் குழந்தை இந்தியாவுக்கு வரவில்லை என்பதையும், தவானின் பெற்றோர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுக்கு குழந்தையைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதையும் நீதிபதி ஒப்புக்கொண்டார். எனவே, குழந்தை தனது தாத்தா பாட்டியை சந்திக்க வேண்டும் என்ற தவானின் விருப்பம் நியாயமானது என்று நீதிபதி கூறினார்.
குழந்தை இந்தியாவில் உள்ள தவானின் வீடு மற்றும் உறவினர்களுடன் பழகுவதை விரும்பாத ஆயிஷாவின் காரணங்கள் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். குழந்தை ஷிகர் தவானுடன் இருப்பதை விரும்பும் பட்சத்தில் ஆயிஷா ஏன் அனுமதிக்க மறுக்கிறார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
தாயைப் போல தந்தையும் குழந்தை வளர்ப்பில் முக்கியமான பங்கு வகிக்கிறார். இந்தியாவைச் சேர்ந்த ஆயிஷா இதை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.