தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் புதிதாக 30 அரசு மருத்துவக் கல்லூரிகள், 20 தனியார் மருத்துவக் கல்லூரிகள் என மொத்தம் 50 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கபட்டுள்ளது.
புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இளநிலை மருத்துவப் படிப்பில் 8 ஆயிரத்து 195 இடங்கள் அதிகரிக்கும். இதனால் மொத்த இடங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 658 ஆக உயரும்.
கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் பிரவீன் பவார் மாநிலங்களவையில் பேசும் போது, “2014ஆம் ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகிறது. மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில், மருத்துவக் கல்லூரிகளையும், அவற்றின் மூலம் மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கையையும் அரசு அதிகரித்துள்ளது” என்று கூறியிருந்தார்.
ஒரு பக்கம் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படும் நிலையில் மறுபுறம் மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. கடந்த சில வாரங்களில் நாடு முழுவதும் 38 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் நடத்திய ஆய்வுகளில், நிர்ணயிக்கப்பட்ட தரத்தை பராமரிக்காததால் அந்தக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி மருத்துவக்கல்லூரி, தர்மபுரி மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் கட்டமைப்பு வசதிகளில் குறைபாடு இருப்பதாக கூறி அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. இதனால் மாணவர் சேர்க்கை நடத்துவதில் சிக்கல் உருவானது.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, தர்மபுரி மருத்துவக் கல்லூரிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.